இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “18 தொல்லியல் அலுவலர் பதவிக்கான தேர்வில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானதாகும். தொல்லியல் அலுவலர் பதவிக்கான தேர்வுகள் 2020 பிப்ரவரி 29 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில் தேர்வானவர்களுக்கு டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வின் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
இந்தப் பதவிக்கு முதுகலை தமிழ், வரலாறு, தொல்லியல் படிப்புகள் மற்றும் தொல்லியலில் முதுகலை பட்டயப் படிப்புடன் இளங்கலை தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்பது கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், தேர்வு எழுதிய மாணவர்களின் கல்வித்தகுதி, இட ஒதுக்கீடு விதிகள், போட்டி தேர்வில் பெற்ற மதிப்பெண், அவர்கள் தொடர்புடைய மூலச் சான்றிதழ்களை சரிபார்த்து அவற்றின் அடிப்படையில் மட்டுமே இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.