அரசியலுக்கு தான் வரவில்லை என்பதை ரஜினிகாந்தே உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் திமுக, அதிமுகவில் இணையத் தொடங்கியுள்ளனர். அதேபோல், நிர்வாகிகள் அவரவர் விருப்பப்படி எந்தக் கட்சியிலும் இணையலாம் என ரஜினி மக்கள் மன்றம் சார்பிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து ஆதரித்து வந்த துக்ளக் இதழ், மாற்று கட்சியில் இணையும் ரஜினிகாந்த் ரசிகர்களை கடுமையாக விமர்சித்திருந்தது.
இதேபோல் உண்மையான ரஜினி ரசிகர்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது என காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியனும் தெரிவித்திருந்தார். அதோடு, ரஜினி தொடங்காத கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்ட அர்ஜுனமூர்த்தியும், விரைவில் தான் கட்சி தொடங்கவுள்ளதாகவும், ரஜினி தான் எப்போதும் எனக்கு தலைவர் எனவும் கூறியிருந்தார்.
அரசியலே வேண்டாம் என ரஜினிகாந்த் ஒதுங்கியிருந்தாலும், அவரைப் பற்றியும், சுற்றியும் பல்வேறு அரசியல் சார்ந்த நிகழ்வுகள் நடந்தவண்ணமே இருக்கின்றன. இது ஒருவகையில் அவருக்கு சோர்வை ஏற்படுத்தியுள்ளதாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென அவரது நலம் விரும்பிகளும் கருதுகின்றனர்.