சென்னை:பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் முழுவதும் முடிவதற்கு 2 மாதங்கள் ஆகும் எனவும், ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வது தொடர்பாக 17 ஆயிரத்து 58 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நேர்முகத்தேர்வு ஏதும் இந்தப் பணிநியமனத்திற்கு இல்லை என்பதையும், அனைத்து நடைமுறைகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணியிடங்களுக்குப் போட்டி எழுத்துத்தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 2021 டிசம்பர் 8 ந் தேதி முதல் 13 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022 மார்ச் 8 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
எழுத்துத் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்குவதற்காக விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, கூடுதல் கல்வித்தகுதி, பணி அனுபவம் குறித்த ஆவணங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்ற மார்ச் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரையில் அறிவுறுத்தப்பட்டது.
ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் சந்தேகங்களை போக்குவதற்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கைகளை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. 17 ஆயிரத்து 58 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 8 விதமான கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க வேண்டியிருந்தது.