மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லிக்கு செல்லும் எல்லை சாலைகளை முடக்கி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தொமுச, சிஐடியூ உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், தலைநகர் சென்னையில் பேருந்து இயக்கம் வழக்கம் போலவே இருந்தது. கரோனா தொற்று காரணமாக குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே வெளியே வருவதாலும், மக்களுக்கு தேவையான அளவு பேருந்துகள் இயக்கப்பட்டதாலும் பாதிப்பு ஏற்படவில்லை. மாநகரப் பகுதிகளில் இயக்கப்படும் 2,500 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இன்று காலை முதல் வழக்கம் போல இயக்கப்பட்டு வருவதாகவும், 32 பணிமனைகளை சேர்ந்த அனைத்து பணியாளர்களும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.