தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்ததில் கூட்டுச்சதி ஏதுமில்லை! - தமிழக அரசு - மருத்துவ இடம்

சென்னை: தனியார் மருத்துவ கல்லூரிகளில் மேற்படிப்பிற்கான இடங்களில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இடம் கிடைத்ததில் அரசு அதிகாரிகளின் கூட்டுச்சதி ஏதும் இல்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

high court
high court

By

Published : Mar 17, 2021, 8:07 PM IST

மருத்துவ மேற்படிப்பிற்கான நீட் தேர்வில் தங்களை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இடமளிக்கப்பட்டதை எதிர்த்தும், நிரப்பப்படாத காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை வழங்கக் கோரியும் மருத்துவர்கள் கீதாஞ்சலி, சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டதுடன், மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான சதி உள்ளதா? அவ்வாறு இருந்தால் அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? தனியார் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்திருந்தால் எவ்வளவு என்ற விவரங்கள் என்பது குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்தது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, கலந்தாய்விற்கு பிறகு மாணவர்களின் பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு காணொலி மூலமாக மட்டுமே கலந்தாய்வு நடைபெற்றதாகவும், அதில் இடம் கிடைத்த சிலரும், தாங்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காத சிலரும் கல்லூரிகளை அணுகாததால் இடங்கள் காலியாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

நிரப்பப்படாத இடங்கள் குறித்த தகவல் கிடைத்ததும் குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கல்லூரிகளை நாடி, படிப்பில் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அரசு வழக்கறிஞர், மேலும், அடுத்த ஆண்டு இது போல் நடக்காது எனவும் உத்தரவாதம் அளித்தார். ஒரு சில கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தது சிபிசிஐடி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து புகாரளிக்க இருப்பதாகவும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு அதிகாரிகளின் கூட்டுச்சதி ஏதும் இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அவரது வாதங்களை பதிவு செய்த நீதிபதி புகழேந்தி, கூடுதல் கட்டணம் வசூலித்த கல்லூரிகளுக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருக்காமல், ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் குழுவிடம் அளிக்கும்படி அறிவுறித்தினார். பின்னர் கலந்தாய்வு நடந்த தேதி, மதிப்பெண் குறைவாகவும், கூடுதலாகவும் பெற்ற மாணவர்களுக்கு இடம் கிடைத்த விவரங்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய தமிழக அரசிற்கு உத்தரவிட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:கரோனா பரவல்... ரவிச்சந்திரனுக்கு பரோல் மறுப்பு - அரசு விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details