கொரோனா வைரஸ் (கோவிட் 19) தடுப்பு கண்காணிப்பு நடவடிக்கை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவலில்,
"சமீபத்தில் சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் (கோவிட் 19) பாதிப்பு 26 நாடுகளில் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நோய் வராமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையங்களில் தொடர்ந்து தெர்மல் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நான்கு விமான நிலையங்களில் தற்போது வரை (பிப்ரவரி 19) 52 ஆயிரத்து 671 பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டாயிரத்து 324 பயணிகள் 18 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் (கோவிட் 19) விழிப்புணர்வு இதில், கொரோனா வைரஸ் சந்தேகத்தின் அடிப்படையில் 46 பயணிகளின் ரத்தப் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றில் சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையத்தில் 42 பயணிகளின் ரத்த மாதிரிகளும், புனேவிலுள்ள தேசிய வைரஸ் நோய் தடுப்பு நிறுவனத்தில் நான்கு பயணிகளில் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையம் சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு 18ஆம் தேதி வந்த எம்.வி. மாக்னெட் என்ற சரக்கு கப்பலில் 19 பேர் வந்தனர். அவர்களைச் சோதனை செய்தபோது இரண்டு பேருக்கு சிறிய அளவில் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு பேரின் ரத்த மாதிரிகள் கிங் இன்ஸ்டிடியூட்டில் பரிசோதனை செய்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்து 28 நாள்களுக்கு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் பார்க்க: உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி