தமிழ்நாட்டில் நிவர் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் கரோனா நோயாளிக்கு ஆக்ஸிஜன் தேவையான அளவில் கையிருப்பு வைக்கவும், படுக்கை வசதி, மருந்துகள், மின் துண்டிப்பு ஏற்பட்டால் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் தங்குவதற்கு நிவாரண மருத்துவ முகாம், 108 ஆம்புலன்ஸ் ஆகியவையும் தயார் நிலையில் உள்ளன.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2 டேங்கரில் ஆக்ஸிஜன்!
சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ஸிஜன் 2 டேங்கரில் கொண்டுவந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிவர் புயல் தாக்கத்தால் விபத்துகள், எதிர்பாராத விபத்துகளால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு சிசிக்கை அளிக்கவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரி முதல்வர் வசந்தாமணி கூறுகையில், “மழையினால் கரோனா தாக்கம் அதிகரிக்கப்பட்டு நோயாளிகள் வருகை புரிந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆக்ஸிஜன் போதுமான அளவில் கையிருப்பு உள்ளது. மேலும் 2 டேங்கர் லாரியிலும் ஆக்ஜிசன் வைக்கப்பட்டுள்ளது. அனைத்துத்துறை மருத்துவர்கள் குழுவும் தயார் நிலையில் உள்ளனர்” என தெரிவித்தார்.