இது தொடர்பாக அவர் இன்று (நவ. 25) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிவர் புயல் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், கடந்த காலத்தில் தாக்கிய கஜா புயலின் பாதிப்பிலிருந்து தமிழ்நாடு அரசு பாடம் கற்றுக்கொண்டதா? என்னும் கேள்வி எழுகிறது.
புயல்-மழை பருவ காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகத் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு ஏற்கனவே தமிழ்நாடு அரசிடம் அளித்த அறிக்கையை செயல்படுத்தாதது ஏன்? என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும்.
நிவர் புயல் தமிழ்நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் எப்போதும்போல அவசர அவசரமாக சில முன்னெச்சரிக்கைப் பணிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. எனினும், தேசியப் பேரிடர் மேலாண்மை அமைப்பு வழங்கிய ஆலோசனைகளை செயல்படுத்தியிருந்தால் இவ்வாறு அச்சப்படவேண்டிய தேவை இருந்திருக்காது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
2018 ஆம் ஆண்டு நேர்ந்த கஜா புயல் பெரும் துயரத்துக்குப்பிறகு இனிவரும் காலங்களில் இவ்வாறு புயல் வந்தால் பாதிப்பு அதிகம் ஏற்படாமல் இருக்கத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை 2018 செப்டம்பரில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கியது. 80 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் 20 ஆலோசனைகளை அந்தக் குழு அளித்திருந்தது.
அதாவது, மாநில பேரிடர் மீட்பு அமைப்பையும், தீயணைப்புத் துறை போன்ற நிவாரணப் பணிகளில் ஈடுபடும் துறைகளின் கட்டமைப்பையும் வலுப்படுத்துவது; பெண்கள் உள்ளிட்ட தன்னார்வலர்களைக் கொண்ட கட்டமைப்பை உருவாக்கி மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவது; நீர் நிலைகளை வலுப்படுத்த நூறு நாள் வேலைத் திட்டத்தைப் பயன்படுத்துவது; கடலோரப் பகுதிகள் எல்லாவற்றிலும் தரைக்கு அடியில் கம்பிவட அமைப்புகளை ஏற்படுத்தி பேரிடர் காலங்களில் மின்சாரம் தடை படாமல் பார்த்துக் கொள்வது; மாவட்ட மற்றும் கிராம அளவில் பயிற்சி பெற்ற தன்னார்வலர் கொண்ட குழுக்களை உருவாக்குவது; புயலில் சாயும் மரங்கள் முதலானவற்றை அகற்றுவதற்கு என்சிசி , என்எஸ்எஸ் உள்ளிட்ட தன்னார்வலர்களைக் கொண்ட குழுக்களை ஏற்படுத்துவது; மீனவ மற்றும் விவசாயத் தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கு மாற்று வாழ்வாதாரங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அதில் கூறப்பட்டிருந்தன. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு என்ன செயல்திட்டங்களை வரையறுத்துள்ளன; என்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என்று தெரியவில்லை.
மேலும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் உள்ளடக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது தமிழ்நாடு அரசு இதுவரை எந்த உத்தரவையும் பிறப்பித்ததாகத் தெரியவில்லை. கரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் வழக்கம்போல தமிழ்நாடு அரசு மெத்தனமாக இருப்பதையே இது காட்டுகிறது.
நிவர் புயல் கரையைக் கடக்கும் இடம் இன்னும் துல்லியமாகத் தெரியாத நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வீதிகளில் நீர் தேங்கியிருப்பதோடு, வீடுகளிலும் நீர் புகுந்து நடைமுறை வாழ்க்கை சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் நீர் திறக்கப்படுமேயானால், 2015ஆம் ஆண்டைப் போல ஒரு அவலநிலை சென்னைக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை மக்களிடம் உருவாக்கியிருக்கிறது. அப்படி ஏற்படாமல் சென்னைவாழ் மக்களைப் பாதுகாக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் பொறுப்பு என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
நிவர் புயல் : பேரிடர் மேலாண்மை அமைப்பின் ஆலோசனைகளை முதலமைச்சர் செயல்படுத்தாதது ஏன்? - தொல். திருமாவளவன் சென்னையிலும் புயலால் பாதிக்கப்படுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ள பிற மாவட்டங்களிலும் குடிசை வீடுகள் முற்றாக சேதமடையும் என்று வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை எச்சரித்துள்ளது. எனவே, நிவர் புயலால் பாதிக்கப்படவுள்ள மாவட்டங்களில் குடிசைவாழ் மக்களைப் பாதுகாப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும், தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளையும் உரியமுறையில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க :மக்களை காக்க திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு!