வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் தற்போது புதுச்சேரிக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் கே. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயலின் தற்போதைய நிலை குறித்து பேசிய அவர், "சுமார் 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் இப்புயல், இன்று (நவம்பர் 25) நண்பகல் அதிதீவிர புயலாக வலுப்பெறும்.
நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
06:21 November 25
இது வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் - மாமல்லபுரம் இடையே, புதுச்சேரி அருகே இன்று இரவு கரையை கடக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது பலத்த காற்று மணிக்கு 120 முதல் 130 கிமீ வேகத்திலும், இடையிடையே 145 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். காற்றுடன் புதுவை, கடலூர்,மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கன மழையும், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கன முதல், மிக கன மழை வரை பெய்யக்கூடும்.
திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காற்று 80 முதல் 90 கிமீ வேகத்தில் வீசக்கூடும். கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னையில் தொடர் மழை நீடிக்கும். இன்று காலை நிலவரப்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 12 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது" என்றார்.
இதையும் படிங்க:நிவர் புயல்: பொதுமக்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு