தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெருங்கும் ’நிவர்’ - தற்போதைய நிலை என்ன?

சென்னை: தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 520 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் நிலை கொண்டுள்ளதாகவும், இதனால், டெல்டா, சென்னை மாவட்டங்களில் மிகக்கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

cyclone
cyclone

By

Published : Nov 23, 2020, 8:08 PM IST

நேற்று தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் (நிவர்) வலுவடைந்து, அதனைத் தொடர்ந்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 25 ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கக் கூடும். சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 520 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இப்புயலானது, மணிக்கு சுமார் 15 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால், நாளை கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80லிருந்து 90 கி.மீ. வரையும், இடையிடையே 100 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். நாளை மறுநாள் புயல் கரையைக் கடக்கும்போது காற்று மணிக்கு 100 லிருந்து 110 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

இதன் காரணமாக, நாளை (24-11-2020) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக்கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

’புயல் கரையை கடக்கும்போது 100-110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்’

நாளை மறுநாள் (25-11-2020) நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக்கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நெருங்கும் ’நிவர்’ - தற்போதைய நிலை என்ன?

(26-11-2020) அன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய வட மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:நிவரை எதிர்கொள்ள மின்வாரியம் தயார்! - அமைச்சர் தங்கமணி

ABOUT THE AUTHOR

...view details