நிவர் புயல் கரையை கடந்த பிறகும் சென்னையில் காற்று வீசி வருகிறது. மேலும், சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பொழிந்து வருகின்றது.
Nivar Cyclone Live Updates: நிவர் புயலின் தாக்கம் குறித்த உடனடி தகவல்கள் - நிவர் புயல் செய்திகள்
22:56 November 26
சென்னையில் சாரல் மழை
20:46 November 26
நிவாரணம் வழங்குவதை விட வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்
புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
18:56 November 26
புதுச்சேரியில் புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை
புதுச்சேரியில் நிவர் புயலுக்கு பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதில், அமைச்சர்கள், பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
17:56 November 26
புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை - முதலமைச்சர்
நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், புயலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
16:51 November 26
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 29ஆம் தேதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், அது எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பின்னர் தெரியவரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
16:45 November 26
படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15:36 November 26
புயலால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு ரூ. 5000 வழங்குக
மழை, வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ. 5000 வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
15:11 November 26
கடலூரில் முதலமைச்சர் ஆய்வு
கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள வாழைத் தோப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
15:10 November 26
மின் விநியோகம் வழங்கப்படும்
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று இரவு 8 மணிக்குள் 80 விழுக்காடு மின் விநியோகம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார்.
14:57 November 26
மீண்டும் ரயில் சேவை
நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட சிறப்பு புறநகர் ரயில் சேவை இன்று பிற்பகல் 3 மணியில் இருந்து மீண்டும் தொடங்கும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
13:50 November 26
வெள்ளநீர் சூழ்ந்த சுங்கச்சாவடி
நிவர் புயல் இன்று காலை கரையை கடந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
13:31 November 26
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்ற திமுக தலைவர் முக ஸ்டாலின், ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
13:18 November 26
இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்ட மெட்ரோ சுரங்கப் பாதை
சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் எதிரிலுள்ள, மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணிக்காக அமைக்கப்பட்ட பாலம் இரண்டாவது முறையாக இடிந்து விழுந்தது. இதனால் சாலையில் இருபது அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது.
13:06 November 26
ரிப்பன் மாளிகையைச் சூழ்ந்த மழை வெள்ளம்
சென்னை மாநகராட்சியின் தலைமை இடமான ரிப்பன் மாளிகையில், மழை நீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது.
12:46 November 26
தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம்!
உளுந்தூர்பேட்டை மேட்டுக்குப்பத்திலுள்ள ஓடையின் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் உளுந்தூர்பேட்டை - விருத்தாச்சலம் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 10 கிராம மக்கள் கடும் அவதிகுள்ளாகியுள்ளனர்.
12:34 November 26
வேளச்சேரியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
நிவர் புயல் பாதிப்பு குறித்து சென்னை வேளச்சேரியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
12:34 November 26
புயல் பாதித்த பகுதிகளுக்கு உதவிக்கரம்: அமித் ஷா ட்வீட்
மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “நிவர் புயல் தொடர்பாக உன்னிப்பாக கவனித்துவருகிறோம். தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
12:12 November 26
காலை 10 மணி வரையில் கணக்கிடப்பட்ட நிவர் புயல் சேத விவரங்கள்!
காலை 10 மணி வரையில் வெளியான அறிக்கையின்படி, நிவர் புயலால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஆடு, மாடுகள் என 26 கால்நடைகளும் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 | மனித உயிரிழப்பு | 3 | |
2 | காயமடைந்தவர்களின் எண்ணிக்கை | 3 | |
3 | சேதமடைந்த வீடுகள் | குடிசை வீடுகள் | 89 |
ஓட்டு வீடுகள் | 12 | ||
மொத்தம் | 101 | ||
4 | கால்நடைகள் உயிரிழப்பு | ஆடு, மாடுகள் | 26 |
பறவைகள் | 0 | ||
மொத்தம் | 26 | ||
5 | சாலைகளில் சேதமடைந்த மரங்களின் எண்ணிக்கை | 380 | |
அகற்றப்பட்ட மரங்களின் எண்ணிக்கை | 380 | ||
6 | மீட்பு முகாம்களின் எண்ணிக்கை | 3085 | |
7 | தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை | ஆண்கள் | 93,030 |
பெண்கள் | 94,105 | ||
குழந்தைகள் | 40,182 | ||
மொத்தம் | 2,27,317 | ||
8 | வீழ்ந்த மின்கம்பங்கள் | 19 | |
சீரமைக்கப்பட்ட மின்கம்பங்கள் | 19 | ||
9 | நிரந்தர மருத்துவ முகாம்கள் | 921 | |
10 | நடமாடும் மருத்துவ குழுக்கள் | 234 | |
11 | மருத்துவ பயன்பெற்றவர்களின் எண்ணிக்கை | 73,491 | |
12 | பயிர் சேதம் | வாழை மரங்கள் | 14 ஏக்கர் |
12:00 November 26
ஏழு மாவட்டங்களில் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்
“நிவர்” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் அரசுப் பேருந்துகள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. புயலானது மரக்காணம் - புதுச்சேரி இடையில் கரையைக் கடந்துவிட்டதால், மேற்கூறிய மாவட்டங்களில் இன்று (26.11.2020) நண்பகல் 12.00 மணி முதல் வழக்கம்போல் அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டன.
11:33 November 26
வெள்ளத்தில் தத்தளிக்கும் முடிச்சூர்!
நிவர் புயலின் தாக்கம் காரணமாக சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ளப் பகுதியிலும் பெருமழை பெய்தது. அதன் விளைவாக தாம்பரம் முடிச்சூரூம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ள நீர் ஆறு போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
11:14 November 26
மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
நிவர் புயலின் தாக்கம் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் நேற்று (நவ. 25) மாலை முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று பகல் 12 மணி முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
11:11 November 26
கடலூர் செல்கிறார் முதலமைச்சர்
நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய பிற்பகல் 2:30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கடலூருக்கு புறப்பட்டுச் செலகிறார்.
11:06 November 26
ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்
உள்நாட்டு விமான சேவையில் சென்னையிலிருந்து கிளம்பும் 41 விமானங்களும், வெளி மாநிலங்களிலிருந்து உள்ளே வரும் 38 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
10:35 November 26
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறப்பு 500 கன அடியாக குறைப்பு!
திருவள்ளூர் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கன அடியாக நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. ஏரியின் நீர் திறப்பு குறைப்பால், அடையாற்றில் படிப்படியாக் வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10:16 November 26
சாலையில் சென்றவர் மீது விழுந்த மரம்!
நிவர் புயலின் காரணமாக சென்னையில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இச்சூழலில் நேற்று (நவ. 25) பகல் நேரத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த நபர் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான கண்காணிப்புப் படக்கருவின் பதிவுகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
09:39 November 26
Nivar Cyclone updates, Nivar Cyclone live updates, நிவர் புயல் தாக்கம், நிவர் புயல்
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நின்று நிதானமாக புதுச்சேரி அருகே அதி தீவிர புயலாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னையில் மழை நிதானமாக பெய்தாலும் புறநகரில் காற்றும் மழையும் சூறையாடியது.
கடலூர், புதுச்சேரியில் சூறைக்காற்றுடன் பெருமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பயிர்கள் சேதமடைந்தன. நள்ளிரவில் கரையை கடக்கத் தொடங்கிய புயல் நின்று நிதானமாக விடிகாலை 5 மணிக்குதான் கரையை விட்டு வெளியேறியது.
புயல் கரையை கடந்தாலும், மழையின் தீவிரம் குறையவில்லை. பல பகுதிகளில் மழை நிற்காமல் பெய்து கொண்டே இருந்தது. புயலினால் பெரியளவில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டாலும், குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் அதிக பட்சமாக 31.4 செமீ மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் 28 செமீ மழையும், கடலூரில் 27.5 செமீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் கரையை கடந்தாலும் உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.