நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் சைதாப்பேட்டையில் பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கினார்.
#LiveUpdates கரையை கடந்தது நிவர் புயல் - நிவர் புயல்
09:29 November 26
நிவர் புயல் பாதிப்பு: ஸ்டாலின் ஆய்வு
09:23 November 26
நிவர் புயல் பாதிப்பு: முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு
நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் பழனிசாமி இன்று பிற்பகல் கடலூர் செல்கிறார்.
09:21 November 26
சென்னையில் விமான சேவை மீண்டும் தொடக்கம்
நிவர் புயல் காரணமாக சென்னையில் ரத்து செய்யப்பட்ட விமான சேவை இன்று காலை 9 மணியளவில் மீண்டும் தொடங்கியது.
09:16 November 26
ஆரணி ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஆரணி ஆற்றின் இரண்டு கரையோரங்களிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது
09:11 November 26
சென்னையில் 390 இடங்களில் மின் துண்டிப்பு
சென்னையில் 390 இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் இன்று மாலை சரி செய்யப்பட்டு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
08:37 November 26
செம்பரம்பாக்கத்திலிருந்து நீர் திறப்பு மேலும் குறைப்பு
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 5000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தற்போது 1500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
08:24 November 26
புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது
நிவர் புயல் கரையை கடந்ததை அடுத்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது.
07:23 November 26
5 மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது
நிவர் புயல் காரணமாக நேற்றிரவிலிருந்து இன்று காலைவரை கடலூரில் 246 மி.மீ, புதுச்சேரி 237 மி.மீ, சென்னையில் 89 மி.மீ, காரைக்காலில் 86 மி.மீ, நாகப்பட்டினத்தில் 63 மி.மீ மழை பெய்துள்ளது.
07:16 November 26
செம்பரம்பாக்கம் நீர் திறப்பு குறைப்பு
செம்பரம்பாக்கத்திலிருந்து 9000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தற்போது 5000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
06:57 November 26
புயல் சேதங்களுக்கு நிவாரணம்
நிவர் ஏற்படுத்திய சேதங்களை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். நிவாரண முகாம்களில் 1.70 லட்சம் பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
06:43 November 26
நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நிவர் புயல் கரையை கடந்த சூழலில் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
05:59 November 26
சூறாவளி புயலாக பலவீனமடையும் நிவர்
இன்று அதிகாலையில் கரைக்கடந்த நிவர் புயல், அடுத்த 3 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து சூறாவளி புயலாக பலவீனமடையும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
04:14 November 26
தீவிர புயலாக வலுவிழந்த நிவர்
அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிவர் புயல் வலுவிழந்து தீவிர புயலாக மாறியுள்ளது.
04:11 November 26
கரையைக் கடந்தது நிவர் புயல்
நேற்றிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடக்க தொடங்கிய நிவர் புயல் இன்று அதிகாலையில் கரையைக் கடந்துள்ளது.
03:17 November 26
சென்னையில் தூக்கி எறியப்பட்ட சாலைத் தடுப்புகள்
புதுச்சேரி அருகே கரையைக் கடந்து வரும் நிவர் புயலால் சென்னையில் வீசிய காற்றுக்கு சாலை தடுப்புகள், மரங்கள் விழுந்துள்ளன. தொடர்ந்து மிதமான மழை பதிவாகி வருகின்றது
03:12 November 26
புயல் கரையைக் கடக்க மேலும் 3 மணிநேரம் ஆகும்
நிவர் புயல் இன்று அதிகாலையில் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்டது. புதுச்சேரி அருகே 16 கிமீ வேகத்தில் நகர்ந்து கரையைக் கடந்து வந்த புயல், கரையைக் கடக்க மேலும் 3 மணிநேரமாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
02:22 November 26
சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் காணை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு.
00:55 November 26
புயல் 2 மணிநேரத்தில் கரையைக் கடக்கும்
நிவர் புயல் 16 கி.மீ. வேகத்தில் கரையைக் கடக்கிறது. இன்னும் 2 மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி புதுச்சேரி அருகே கரையைக் கடக்கலாம் எனவும், அப்போது காற்று 145 கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
00:55 November 26
00:20 November 26
வேலூரில் மின்சாரம் நிறுத்தம்
தற்போது வேலூர் காட்பாடி பகுதியில் கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் மின்சாரம் நிறுத்தம்
00:19 November 26
புதுச்சேரியில் மின்சாரம் நிறுத்தம்
புதுச்சேரியில் பலத்த காற்று மற்றும் மழைபெய்கிறது. புயல் புதுச்சேரி அருகே கரையைகடக்க இருப்பதாலும் தற்போது புதுவை முழுவதும் மின் நிறுத்தம் செய்யப்பட்டது.
23:47 November 25
புதுச்சேரி அருகே 3 மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி கரையைக் கடக்கும்
மிகவும் கடுமையான சூறாவளி புயல் இப்போது கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ளது, புதுச்சேரிக்கு கிழக்கே 40 கி.மீ தொலைவில் உள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22:48 November 25
கரையை கடக்க தொடங்கியது நிவர் புயல்
புதுச்சேரியின் வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் அதி தீவிர புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. அதிகாலை 3 மணி வரை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
22:42 November 25
22 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டிய நிலையில், நீர்வரத்து 6500 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 7000 கன அடியில் இருந்து 9000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
21:58 November 25
நிவர் புயல்: ஒரு மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்கும்
கடலூரில் இருந்து 60 கி.மீ., தொலைவிலும், சென்னையில் இருந்து 130 கி.மீ., தொலைவிலும் நிவர் புயல் நிலை கொண்டுள்ளது. 16 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வரும் புயல், இன்னும் ஒரு மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
21:25 November 25
குரூப்-2 நேர்முகத் தேர்வுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு
குரூப்-2 மூன்றாம் கட்ட நேர்முகத் தேர்வு நவம்பர் 27ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
21:03 November 25
7 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 7 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
20:24 November 25
பலத்த காற்று: 286 செல்போன் கோபுரங்கள் பாதிப்பு
நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதால், 286 செல்போன் கோபுரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
20:18 November 25
சென்னை மக்களுக்கு வனச்சரக அலுவலர்கள் கோரிக்கை
சென்னையில் தொடர் மழையால் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் குடியிருப்புக்குள் நுழைந்தால், 044-22200335, 9566184292 என்ற எண்னுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று வேளச்சேரி வனச்சரக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19:45 November 25
நள்ளிரவு 2 மணிக்கு கரையை கடக்கிறது நிவர் புயல்
நிவர் புயல் நள்ளிரவு 2 மணிக்கு மேல் கரையை கடக்க உள்ளதாக பேரிடர் மீட்பு படை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
19:11 November 25
மீட்பு பணிக்கு தயாராகும் சுமித்ரா, ஐஎன்எஸ், ஜோதி கப்பல்கள்
நிவர் புயல் மீட்பு பணியில் கடற்படைக்கு சொந்தமான சுமித்ரா, ஐஎன்எஸ், ஜோதி கப்பல்கள் ஈடுபட இருப்பதாக கிழக்கு கடற்படை தலைமையகம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக ஐஎன்எஸ் ஜோதி கப்பல் தமிழ்நாடு வந்தடைந்தது.
19:10 November 25
பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்
நிவர் புயல் காரணமாக பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19:05 November 25
16 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை
நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய 16 மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 25) விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
19:05 November 25
திருவாரூரில் கனமழை
திருவாரூரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
17:52 November 25
நிவர் புயல் : சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது!
வர் புயல் காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மூடல்! - சென்னை விமான நிலையம்
17:50 November 25
சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது
நிவர் புயல் காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் இன்று இரவு 7 மணியில் இருந்து நாளை காலை 7 மணி வரை மூடப்படுகிறது.
17:30 November 25
புதுச்சேரி கடற்கரையில் கடல் சீற்றம்
காந்தி சிலை அருகே 18 முதல் 20 அடி வரை கடல் அலை எழுந்து சீற்றத்துடன் வீசுகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
17:11 November 25
அதி தீவிர புயலாக மாறியது 'நிவர்'
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதால், அடுத்து 3 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடலூரில் இருந்து 90 கி.மீ., தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது.
16:48 November 25
கடலூரை நெருங்குகிறது நிவர் புயல்
கடலூருக்கு 180 கி.மீ., தொலைவிலும் சென்னைக்கு 250 கி.மீ., தொலைவிலும் நிவர் புயல் நிலை கொண்டுள்ளது. புயல் கரையை கடந்த பிறகும் அதன் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15:33 November 25
சென்னையில் பலத்த காற்று...!
செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், காசிமேடு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
15:18 November 25
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு
நிவர் புயல் எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
14:10 November 25
155 கி.மீ வேகம் வரை சூறைக்காற்று!
நிவர் புயல் 11 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், இன்று நள்ளிரவு அல்லது அதிகாலைக்குள் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வேளையில் 155 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
14:03 November 25
நெருங்கி வரும் நிவர்!
கடலூரிலிருந்து 180 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 190 கி.மீ., தொலைவிலும், சென்னையிலிருந்து 250 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
13:59 November 25
13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை!
சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 26) பொது விடுமுறை அளித்து முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
13:42 November 25
எந்தெந்த ரயில்கள் ரத்து...
நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள தொடர் வண்டியில் விபரங்களை குறித்து காணலாம்:
முழுமையாக ரத்து செய்யப்படும் தொடர் வண்டிகள்:
25 நவம்பர் 2020
- வண்டி எண்: 06011 | கன்னியாகுமரி - நிஜாமுதீன் சிறப்பு தொடர்வண்டி
- வண்டி எண்: 05119 | ராமேஸ்வரம் - மண்டுவாடி சிறப்பு தொடர்வண்டி
26 நவம்பர் 2020
- வண்டி எண் 02606 | காரைக்குடி - சென்னை எழும்பூர்
- வண்டி எண் 02636/02635 | மதுரை - சென்னை எழும்பூர்
- வண்டி எண் 06795/06796 | சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி
28 நவம்பர் 2020
- வண்டி எண் 06012 | நிஜாமுதீன் - கன்னியாகுமரி சிறப்பு தொடர்வண்டி
தூரம் குறைக்கப்பட்ட தொடர்வண்டிகள்
25 நவம்பர் 2020
- வண்டி எண் 06232 | மைசூரு - மயிலாடுதுறை சிறப்பு தொடர்வண்டி, மைசூரு - திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும்.
- வண்டி எண் 06188 | எர்ணாகுளம் - காரைக்கால் சிறப்பு தொடர்வண்டி, எர்ணாகுளம் - திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும்.
26 நவம்பர் 2020
- வண்டி எண் 06231 | மயிலாடுதுறை - மைசூரு சிறப்புத் தொடர்வண்டி, திருச்சிராப்பள்ளி - மைசூரு இடையே இயக்கப்படும்
- வண்டி எண் 06187 | காரைக்கால் - எர்ணாகுளம் சிறப்பு தொடர்வண்டி, எர்ணாகுளம் - திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும்.
- வண்டி எண் 02084 / 02083 | கோயம்புத்தூர் - மயிலாடுதுறை ஜன் சதாப்தி சிறப்பு தொடர்வண்டி, கோயம்புத்தூர் - திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும்.
13:13 November 25
கொட்டும் மழையில் குடையுடன் களமிறங்கிய முதலமைச்சர்!
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொட்டும் மழையில் ஏரி அமைந்திருக்கும் பகுதியில் நேரில் சென்று ஆய்வினை மேற்கொண்டார்.
13:11 November 25
மதுக்கடைகள் மூடல்
நிவர் புயல் முன்னெச்சரிக்காக கடலூர், விழுப்புரம், செங்கல்ப்பட்டு ஆகிய மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
12:57 November 25
தர்கா மேற்கூரை சரிந்து சேதம்!
சென்னை அண்ணா சாலையிலுள்ள தர்காவின் மேற்கூரை காற்றுடன் கூடிய மழையினால் சரிந்து சேதமடைந்துள்ளது.
12:30 November 25
கொட்டும் மழையில் ஸ்டாலின்!
சென்னை பெரம்பூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
12:16 November 25
மணிக்கு 11 கி.மீ., வேகத்தில் நகரும் நிவர்!
சென்னை வானிலை மையம் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த தகவலின்படி, “மணிக்கு 11 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது நிவர் புயல். வடமேற்கு திசை நகர்ந்து புதுச்சேரி அருகே கரையை கடக்கும். சென்னையில் 100 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்” என்று கூறப்பட்டிருந்தது.
11:52 November 25
5 வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம்!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது. நீர் வெளியேறும் வாய்க்கால் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலூர், குன்றத்தூர், திருநீர்மலை, சிறுகளத்தூர், வழுதியமேடு, திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
11:14 November 25
இதுவரையில் எடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் என்னென்ன?
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 13 மாவட்டங்களில் புயல் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் இருந்து 9,948 ஆண்கள், 10,270 பெண்கள், 3,948 குழந்தைகள் என மொத்தம் 24,166 பேர் மீட்கப்பட்டு 315 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடலூரில் 6, நாகப்பட்டினத்தில் 3, மயிலாடுதுறையில் 1, விழுப்புரத்தில் 2, செங்கல்பட்டில் 3, தஞ்சாவூர் 1 என மொத்தம் 15 தேசிய பேரிடர் மேலான்மை மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், 2 மீட்பு படகுகளுடன் இந்திய ராணுவத்திலிருந்து 8 குழுக்கள் இன்று சென்னை வந்து சேர்கின்றனர். அதுமட்டுமில்லாமல், ஒரு மீட்பு படகுடன் 6 குழுவினர் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் காரணமாக 11 விரைவு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 26 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முகாம்களை பொறுத்தவரையில்,
- பல்நோக்கு சிறப்பு பாதுகாப்பு முகாம்கள் - 121
- தங்குமிட முகாம்கள் - 4,733
இந்த முகாம்களில்மொத்தமாக 12லட்சத்து 98ஆயிரத்து 768 பேர் வரை பாதுகாப்பாக தங்கவைக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
10:40 November 25
அடையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்
அடையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர். இந்த காட்சிகள் சைதாப்பேட்டை காயிதே மில்லத் பாலத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
10:31 November 25
விளம்பர பலகைகளை அகற்ற உத்தரவு!
சென்னையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
10:03 November 25
மாநகரின் மழை அளவு
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 127.53 மிமீ மழை பதிவாகியுள்ளது. காற்றோடு சேர்ந்த மழை காரணமாக, இன்று மட்டும் 26 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
09:46 November 25
ஆறு பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் நீர் வெளியேறும் வாய்க்கால் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலூர், குன்றத்தூர், திருநீர்மலை, சிறுகளத்தூர், வழுதியமேடு, திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
09:38 November 25
வேரோடு சாய்ந்த தூங்கு மூஞ்சி மரம்!
ரங்கராஜபுரம் பிரதான சாலையில் 20ஆண்டு பழமையான தூங்குமூஞ்சி மரம் காற்றுடன் பெய்த மழையில் வேரோடு சாய்ந்து விழுந்தது. அதை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
09:32 November 25
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில், 148 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
09:27 November 25
புயல் சேதத்திற்கு உதவ ராணுவம் தயார்
நிவர் புயலால் தமிழ்நாடு, புதுச்சேரியில் பாதிப்பு ஏற்பட்டால் உதவுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. அதில் 12 மீட்புக் குழுக்கள், 2 தொழில்நுட்பக் குழுக்கள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
09:20 November 25
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் நேரம்
செம்பரம்பாக்க ஏரியில் இருந்து உபரிநீர் இன்று பகல் 12 மணியளவில் 1000 கன அடி திறக்கப்படுகிறது. நீர் வளத்திற்கு ஏற்ப படிப்படியாக நீர் வெளியேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
07:43 November 25
மாற்றுத் திறனாளிகளுக்கான நிவர் புயல் உதவி எண்கள் அறிவிப்பு
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான நிவர் புயல் அவசரகால உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உதவி தேவைப்படுவோர் 18004250111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள், 970079999 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலம் காணொலி அழைப்பு மேற்கொண்டு, தங்களுக்கான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
07:19 November 25
அதிதீவிர புயலுக்கான எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்!
சென்னை எண்ணூர் துறைமுகம் 9 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேவேளையில், புதுச்சேரி துறைமுகத்தில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
07:08 November 25
நிவர் புயல்: 145 கி.மீ., வரை காற்று வீசக்கூடும்!
புதுச்சேரியின் கிழக்கு - தென் கிழக்கே இடையே வங்க கடலில் சுமார் 320 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 380 கிமீ தொலைவிலும் நிவர் புயல் நிலைகொண்டுள்ளது. தற்போது அது மணிக்கு 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகின்றது.
இதைத் தொடர்ந்து இன்று நண்பகலுக்குள் அதிதீவிர புயலாக வலுபெறக்கூடும். மேலும் இப்புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் - மாமல்லபுரம் இடையே, இன்று இரவு கரையை கடக்ககூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது பலத்த காற்று மணிக்கு 120 முதல் 130 கி.மீ., வேகத்திலும், சமயங்களில் 145 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
இதனிடையில், புதுவை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காற்றுடன் கூடிய அதிக மழையும், அதை ஒட்டியுள்ள ஏனைய பகுதிகளில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும்.
நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர், புதுவை, விழுப்புரம் மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 - 135 கி.மீ., வேகத்திலும், சில சமயங்களில் 145 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் காற்று 80 முதல் 90 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
06:26 November 25
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் கே. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சுமார் 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் இப்புயல், அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை பெய்துவருகிறது.
நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 12 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. நிவர் புயல் இன்று (நவம்பர் 25) மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும்போது, 155 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.