சென்னை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள ஐஐஐடிடிஎம் நிறுவனத்தில் இன்று (செப்.10) நடந்த 10ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்திநராகக் கலந்துகொண்ட மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய கல்விக் கொள்கை உயர்கல்விக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது எனவும்; தொழில்நுட்பங்களை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
போட்டி மனப்பான்மை மாணவர்களுக்கு வேண்டும்: அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், 'தொழில்நுட்பங்களை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் புரிந்துகொள்ளவேண்டும். மாணவர்கள் சமூகம் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டிய அவசியம் உள்ளது. உலக அளவில் அறிவியல் தொழில்நுட்பங்களை போட்டி மனப்பான்மையுடன் அணுக வேண்டும். அறிவியல் மற்றும் அதன் திறன் மேம்பாடு மிகவும் அவசியம்.
பெரும் சக்தியாக இந்தியா மாறும்: விவசாயிகளும் ராணுவ வீரர்களும் முன்னேற வேண்டும் என நமது நாட்டின் சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அவர் கூறியதைப் போல, ஜெய் விஞ்ஞான், ஜெய் கிசான், ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) ஆகியவற்றை நமது குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். விஞ்ஞானிகளும் அவர்களின் ஆராய்ச்சிகளும் நாட்டின் அடுத்த 25 வருட வளர்ச்சிக்கு அவசியமானது. வருகின்ற 2047-ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும்.
உலகில் 58 சி.இ.ஓ. இந்தியர்கள்:அதற்கு இக்குறிக்கோள்களை நாம் பின்பற்ற வேண்டும். தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும். வருகின்ற 2028-ல் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இந்தியாவில் உயரும். 2026-ல் நமது நாட்டில் வேலைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 65% ஆக அதிகரிக்கும். எனவே, 2047-ல் பொருளாதாரத்தில் முன்னேறிய சக்தியாக நமது நாடு திகழும். உலக அளவில் 58 சி.இ.ஓ-வினர் இந்தியர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் இந்தியக் கல்வி முறையில் பயின்றவர்கள். சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள 25% நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன.