இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை ஆய்வுசெய்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுவருகிறது. அந்த வகையில், 2020ஆம் ஆண்டிற்கான தேசிய தரவரிசைப் பட்டியலை அத்துறையின் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று வெளியிட்டார்.
அதில், சிறந்த பல்கலைக்கழகம், கல்லூரி, பொறியியல் கல்வி நிறுவனம், மேலாண்மை படிப்பு நிறுவனம், மருந்தியல் கல்வி நிறுவனம், மருத்துவக் கல்வி நிறுவனம், கட்டடக் கலை கல்வி நிறுவனம், சட்டம் ஆகிய ஒன்பது துறைகளின் கீழ் தனித்தனியே பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) முதலிடத்தையும், பெங்களூர் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனம் 2ஆம் இடத்தையும், டெல்லி ஐஐடி 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. கோயம்புத்தூரில் உள்ள அமிர்தா விஸ்வ வித்யாபீடம் 13ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.
2019ஆம் ஆண்டு இப்பட்டியலில் 14ஆம் இடம்பிடித்த அண்ணா பல்கலைக்கழகம், இந்தாண்டு ஆறு இடங்கள் பின்னோக்கி 20ஆவது இடத்திற்குச் சென்றுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகம் 21ஆம் இடத்தைத் தக்கவைத்துள்ளது. சென்றாண்டில் 33ஆம் இடத்திலிருந்த சென்னை பல்கலைக்கழகம், தற்போது 41ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
சிறந்த பல்கலைக்கழகங்களில் பெங்களுர் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் முதலிடத்தையும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. தமிழ்நாட்டின் அமிர்த விஷ்வ வித்யாபீடம் 4ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்தாண்டு 6ஆம் இடத்திலிருந்த அண்ணா பல்கலைக்கழகம், இந்தாண்டு 12ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகம் 13ஆம் இடத்திலும், சென்னை பல்கலைக்கழகம் 22ஆம் இடத்திலும் உள்ளன.
சிறந்த கல்லூரிகள் தரவரிசை பட்டியலில், சென்னை மாநிலக் கல்லூரி 4ஆம் இடத்தையும், லயோலா கல்லூரி 5ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. அதேபோல் நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 14ஆம் இடத்தையும், வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 15ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.
அதேபோல், கட்டடக் கலையில் இந்தியாவிலுள்ள 20 கல்வி நிறுவனங்களில், திருச்சி தியாகராஜா பொறியியல் கல்லூரி 18ஆம் இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 19ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. மருத்துவப் படிப்பில் முதலிடத்தை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும், வேலூர் கிறிஸ்துவக் கல்லூரி 3ஆம் இடத்தையும், கோயம்புத்தூர் அமிர்த விஷ்வ வித்யாபீடம் 7ஆம் இடத்தையும், சென்னை மருத்துவக் கல்லூரி 12ஆம் இடத்தையும், அண்ணாமலை மருத்துவக் கல்லூரி 35ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: முகக்கவசங்களை திரும்ப ஒப்படைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!