சென்னை:கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் ஆக.10 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு நடத்திய 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து 2,200-க்கும் மேலான வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் செஸ் வீரர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பினர். இந்நிலையில், நைஜீரியாவைச் சேர்ந்த டோரிட் செமுவா ஒபோவினோ என்ற கடைசி வீராங்கனையை சென்னை பன்னாட்டு விமானநிலையத்தில் செங்கல்பட்டு காவல் துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் தலைமையிலான போலீசார் தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் வழி அனுப்பினர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நைஜீரியா வீராங்கனை டோரிட் செமுவா ஒபோவினோ, 'செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்தேன். தமிழ்நாடு போலீசார் மிகவும் சிறப்பாகப் பணியாற்றினர். உடல் நலக்குறைவால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட என்னை மருத்துவர்கள் நன்றாக கவனித்தனர். தமிழ்நாட்டிற்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.
தொடர்ந்து பேசிய காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், 'செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொண்ட வீரர்களில் கடைசி நைஜீரிய வீராங்கனை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்குப் பின் பாதுகாப்பாக வழி அனுப்பப்பட்டார். செஸ் ஒலிம்பியாட்டில் பாதுகாப்புப் பணியில் போலீசார் சிறப்பாகப் பணியாற்றினர்.