சென்னை:நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அமலாக்கத் துறையுடன் இணைந்து 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை மேற்கொண்டது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அசாம் மத்திய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது.
இந்த சோதனையானது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்புடைய ஐந்து வழக்குகள் சம்பந்தமாக நடத்தப்பட்டது. விசாரணை மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலும் ஆதாரத்தின் அடிப்படையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரவாதத்திற்கு நிதி திரட்டியதும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதும், தீவிரவாத பயிற்சி முகாம்கள் நடத்தியதும் தெரியவந்துள்ளது.
ஆயுதப் பயிற்சி கொடுத்து தீவிரவாத கும்பலில் ஆட்கள் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது . குறிப்பாக கடந்த ஜூலை நான்காம் தேதி ஹைதராபாத் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் 25 பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளுக்கு எதிராக தெலங்கானாவில் தொடரப்பட்ட வழக்கில் பல தகவல்களை திரட்டினர். குறிப்பாக இந்த நிர்வாகிகள் மையங்களை உருவாக்கி வன்முறை மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயிற்சி அளித்தது மற்றும் இரண்டு பிரிவினருக்கு இடையே மத அடிப்படையில் மோதலை உருவாக்கியது தெரியவந்தது.
பிஎஃப்ஐ தலைவர்கள் மீது வன்முறை தடுப்புச் சட்டம்:அதிகப்படியான குற்ற வழக்குகள் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீதும் அதன் தலைவர்கள் மீதும் உறுப்பினர்கள் மீதும் வன்முறை தடுப்புச் சட்டங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கல்லூரி பேராசிரியர் கையை வெட்டியது, கொலை , முக்கிய பிரமுகர்கள் குறிவைத்து தாக்குவதற்காக வெடி பொருட்களை சேகரித்து வைத்தது ,ஐ.எஸ் தீவிரவாதிகளை ஆதரிப்பது பொது சொத்துக்களை சேதப்படுத்துவது, பொதுமக்களிடம் தீவிரவாத எண்ணங்களை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.