தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

3,000 கிலோ ஹெராயின்: சென்னையில் 10 மணிநேரமாக தொடரும் என்ஐஏ ரெய்டு - ஹெராயின்

குஜராத்தில் ரூ.21ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியினரின் வீட்டில் டெல்லி என்ஐஏ தொடர்ந்து பத்து மணிநேரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

3000 கிலோ ஹெராயின் விவகாரம்
3000 கிலோ ஹெராயின் விவகாரம்

By

Published : Oct 9, 2021, 6:50 PM IST

Updated : Oct 9, 2021, 7:40 PM IST

சென்னை: குஜராத்தின் அதானி கட்டுப்பாட்டில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் கப்பல் வழியாக முகத்துக்கு பூசும் பவுடரை (TALCUM POWDER) போல் கடத்த முயன்ற 2,988 கிலோ ஹெராயினை வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தப் போதை பொருளை ஆப்கானிலிருந்து ஈரானுக்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, நிறுவனத்தின் ஜிஎஸ்டி பெயரை வைத்து மச்சாவரம் சுதாகரன், அவரது மனைவி துர்கா, ராஜ்குமார் ஆகியோரை மத்திய வருவாய் நுண்ணறிவுத் துறை அலுவலர்கள் கைது செய்தனர்.

மேலும், இவர்களை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது பல நாடுகளை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

4 ஆப்கன்கள் கைது

இது தொடர்பாக சென்னை, நொய்டா, கோயம்புத்தூர், டெல்லி, அகமதாபாத், மந்த்வி, காந்திதம், விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடையதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த நான்கு நபர்கள் உட்பட 8 பேரை டிஆர்ஐ அலுவலர்கள் கைது செய்தனர்.

இவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், பல நாடுகளுடன் தொடர்பிருப்பதால் இந்த வழக்கானது டெல்லி என்ஐஏ-விற்கு மாற்றப்பட்டது.

லேப்டாப், செல்போன் பறிமுதல்

இந்நிலையில், 2988 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்த வழக்கில், டெல்லி என்ஐஏ அலுவலர்கள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக, டெல்லி என்ஐஏ அலுவலர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து டெல்லி, சென்னை, ஆந்திரா ஆகிய இடங்களுக்கு சென்று இன்று (அக். 9) காலை 8 மணி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் 10 மணிநேரமாக தொடரும் என்ஐஏ ரெய்டு

குறிப்பாக, சென்னை கெளப்பாக்கம் வ.உ.சி தெருவில் வசித்து வந்த தம்பதியினரான மச்சாவரம் சுதாகரன், அவரது மனைவி துர்கா வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட டெல்லி என்ஐஏ அலுவலர்கள் காலை 8 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மச்சாவரம் சுதாகரனின் லேப்டாப், செல்போனை பறிமுதல் செய்து அதிலுள்ள ஆதாரங்களை வைத்து போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்து சோதனை நடத்தி வருகின்றனர்.

ஹெராயின் கடத்தல்

மேலும், அவர்களின் வங்கிக் கணக்கை முடக்கி பரிவர்த்தனை செய்த கணக்கு விவரங்களை சேகரித்து போதை பொருள் கடத்தலில் பின்னணியில் யார் உள்ளனர் என பல கோணங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கைதான தம்பதிகளின் பின்னணி குறித்து அங்கு வசித்து வந்தவர்களிடம் என்ஐஏ அலுவலர்கள் விசாரணை நடத்தினர். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக எப்படி இந்த தம்பதிக்கு தெரியும், யார் மூலமாக ஹெராயின் கடத்தல் விஷயங்கள் தெரிந்தது, அது தொடர்பான ஆவணங்கள் வீட்டில் இருக்கிறதா என இதுபோன்ற பல்வேறு கேள்விகளின் அடிப்படையில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: TOP 10 HIGHLIGHTS: 3,000 கிலோ ஹெராயின் வழக்கு முழு பின்னணி!

Last Updated : Oct 9, 2021, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details