சென்னை: கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக களியக்காவிளை போலீசார் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் இருவேறு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் கொலை மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்தது ஆகிய வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி பின் தலைமறைவான தீவிரவாதி காஜா மைதீன், நவாஸ், அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகியோர் இதன் பின்னணியில் இருப்பதும், ஜிகாதி தீவிரவாதிகளான அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து கேரளா தப்பிச் செல்லும்போது களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதும் தெரியவந்தது.
இதனிடையே தீவிரவாதி காஜா மைதீனுக்கு உதவியதாக செயல்பட்ட மெஹபூப் பாஷா, இஜாஸ் பாஷா, ஜாஃபர் அலி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு கியூ பிராஞ்ச் போலீசாரால் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
மேலும், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனைக் கொன்ற அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகியோர் பெங்களூரில் பதுங்கியிருந்த நிலையில், பெங்களூர் சிறப்புப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் டெல்லியில் பதுங்கியிருந்த தீவிரவாதி காஜா மைதீன், நவாஸ் உள்ளிட்ட 3 பேரை டெல்லி சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர்.
அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தொடர தீவிரவாத தொடர்பு இருப்பதன் காரணமாக கியூ பிராஞ்ச் போலீசார் பதிவு செய்த வழக்கையும், களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொல்லப்பட்ட வழக்கையும் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.