தமிழ்நாடு, புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் நடைபெற்ற வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதுத் தவிர அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரபலங்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
இன்று 6 மணியுடன் 37 மக்களவைத் தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து சித்திரைத் திருவிழா காரணமாக, மதுரை தொகுதியில் 8 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவும் நிறைவுபெற்றது.
இந்நிலையில், தேர்தல் முடிந்த பின் ரஜினியின் ரசிகர்கள் அடுத்த ஓட்டு ரஜினிக்கே, அடுத்த ஓட்டு தலைவருக்கே என்று ஹேஸ்டேக்கை இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
டிவிட்டரில் டிரெண்டாகி வரும் அடுத்த ஓட்டு ரஜினிக்கே ஹாஸ்டேக் நடிகர் ரஜினிகாந்த் தேர்தலில் போட்டியிடுவேன் என்று 2017ஆம் ஆண்டு அறிவித்தார். ஆனால், தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றியமைத்த ரஜினி, கட்சி குறித்து எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்த ரஜினி 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்தார்.
சமீபத்தில் வெளியான பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த நதிநீர் இணைப்பு குறித்து கருத்து தெரிவித்த ரஜினி, அரசியலில் தனது நிலையை அவ்வப்போது கருத்துகளாக வெளியிட்டு தனக்கும் அரசியலுக்கும் வெகு தூரமில்லை என்பதை அவரின் ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார்.
அடுத்த ஓட்டு தலைவருக்கு என்று ரஜினியின் ரசிகர்கள் கூறி வருவதைப்போல், கட்சி மற்றும் தேர்தல் போட்டி குறித்து அறிவித்து அதற்கான வாய்ப்பை அவரது ரசிகர்களுக்கு, ரஜினி அளிப்பாரா இல்லையா என்ற கேள்விக்கு காலமே பதில் கூற வேண்டும்.