சென்னை: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தங்கம்,வெள்ளி,வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்று சென்னை திரும்பிய டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கூறியதாவது, "காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பான முறையில் விளையாடினார்கள். பல்வேறு நாடுகள் கலந்து கொண்ட போட்டியில் பங்கேற்றதால் போட்டி மிகவும் கடினமாக இருந்தது. இங்கிலாந்து நாட்டு போட்டியாளர்களுடன் விளையாடியபோது போட்டி மிகவும் கடினமாக இருந்தது.
நான் தனிநபர் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் வெண்கல பதக்கமும், இரட்டையர் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளேன். காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை வெல்ல பயிற்சியாளர்கள் முக்கிய காரணமாக இருந்தனர். மூன்று விதமான பதக்கங்களையும் டேபிள் டென்னிஸ் போட்டியில் வென்றது பெருமையாக உள்ளது.அடுத்த கட்டமாக ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு.