நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன், ” தமிழகத்தில் கரையை கடந்த நிவர் புயல் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து, தெற்கு ஆந்திராவின் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உள்ளது.
இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சோளிங்கரில் 23 செமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
தற்போதைய நிலவரப்படி, அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது எதிர்வரும் 30 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் டிசம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும்.