சென்னை: மாலத்தீவு பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மாலத்தீவு பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், தென் தமிழ்நாட்டு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை (ஜனவரி 15) லேசானது முதல் மிதமான மழையும், தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் (ஜனவரி 16) லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.