சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 26 காவல்துறை அதிகாரிகளுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கியும் பணியிடங்களை ஒதுக்கியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் எஸ்பி ஒருவரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் குறிப்பாக சென்னை காவல்துறையில் கொளத்தூர் காவல் மாவட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூருக்கு என்று தனியாக துணை ஆணையர் ஒருவரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏஎஸ்பியாக இருந்த ராஜாராம் எஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொளத்தூர் துணை ஆணையராக ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறையில் 12 காவல் மாவட்டங்கள் கொண்டு 12 துணை ஆணையர்கள் செயல்பட்டு வருகின்றனர். தற்போது மேலும் ஒரு காவல் மாவட்டமாக கொளத்தூர் காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதைப்போல, பண்டிகங்காதர் கரூர் மாவட்ட செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எஸ்பியாகவும், ஜோஷ்தங்கையா- தாம்பரம் காவல் ஆணையரக பள்ளிக்கரணை துணை ஆணையராகவும், வனிதா மதுரை மாநகர காவல்துறை தலைமையக துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.