தமிழ்நாட்டில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (டிச. 31) மட்டும், டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 159 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.48.75 கோடி, மதுரையில் ரூ.27.30 கோடி திருச்சியில் ரூ.28.10 கோடி, கோவையில் ரூ.28.40 கோடி, சேலத்தில் ரூ.26.49 கோடி மது விற்பனை ஆகியுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் சராசரியாக, வார நாள்களில் ரூ.70-75 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனையாகின்றன. வார இறுதி நாள்களில் வசூல் ரூ.90 கோடி வரை விற்பனை அதிகரிக்கும். தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில், விற்பனை புள்ளி விவரங்கள் பொதுவாக ரூ.100 கோடியைக் கடக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் தமிழ்நாட்டில் ஐந்தாயிரத்து 152 மதுபான சில்லறை விற்பனை கடைகள், 1,872 பார்கள் உள்ளன. 2018-19ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் அரசு ரூ.31,157 கோடி வருமானத்தை ஈட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நேற்று (டிச. 31) காலையில் இருந்து தமிழ்நாட்டில் மது விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று உள்ளது. நேற்று மட்டும் 159 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.