தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெகிழி ஒழிப்பு: 'மீண்டும் மஞ்சப்பை' - அரசாணை வெளியீடு - மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம்

நெகிழிப் பொருள்களுக்கு எதிராக 'மீண்டும் மஞ்சப்பை' என்ற விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

மீண்டும் மஞ்சப்பை
மீண்டும் மஞ்சப்பை

By

Published : Nov 28, 2021, 12:07 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு 2019 ஜனவரி 1ஆம் தேதிமுதல் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்குத் தடைவிதித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆரம்பத்தில் நெகிழிப் பொருள்கள் விற்கப்படாமல் இருந்தன. ஆனால், மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக நெகிழிப் பொருள்கள் விற்பனைக்கு வந்தது.

இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், "இனி தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைத் தயாரித்தால் முதல் முறை ஒரு லட்சம் ரூபாய், மீண்டும் செய்தால் இரண்டு லட்சம் ரூபாய், மூன்றாவது தடவையும் செய்தால் மூன்று லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அந்த நிறுவனம் தயாரித்தால் அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படும்.

ஒருமுறை பயன்பாடு 40 விழுக்காடாம்!

அதேபோல தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை கையிருப்பு வைத்திருந்தாலோ அல்லது வாகனங்களில் எடுத்துச் சென்றாலோ முதல் தடவை 25 ஆயிரம் ரூபாய், அடுத்து 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் அவ்வாறு செய்தால் அந்த வாகனம் பறிமுதல்செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நெகிழிப் பொருள்களுக்கு எதிராக 'மீண்டும் மஞ்சப்பை' என்ற விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதில், "நெகிழியால் இந்த உலகம் மிகப்பெரிய பிரச்சினையைச் சந்தித்துவருகிறது. ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் நெகிழிகள் 40 விழுக்காடு உலகளவில் தயார்செய்யப்படுகின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

தமிழ்நாட்டில் நெகிழிக் குப்பைகள்

ஆனால் அவை தூக்கி வீசப்பட்ட பிறகு சுற்றுச்சூழலில் பல ஆயிரம் ஆண்டுகள் தங்கிவிடுகின்றன. இவற்றால் மண், ஆறுகள், கடல்களில் மிகப்பெரிய பிரச்சினைகள் உருவாகின்றன. குறிப்பிட்ட அளவு நெகிழிகள் எரிக்கப்படும்போது, அவற்றிலிருந்து வரும் புகை கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இந்த நெகிழியால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மிருகங்கள் பலியாகின்றன.

ஆண்டுதோறும் உலகளவில் 14 மில்லியன் டன் நெகிழிகள் கடலில் சென்று சேருவதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு ஒரு புள்ளி விவரத்தை கூறுகிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி 2019-20ஆம் ஆண்டில் 34 லட்சத்து 69 ஆயிரத்து 780 டன் நெகிழிக் கழிவுகள் இந்தியாவில் தேக்கமடைந்தன.

தமிழ்நாட்டில் மட்டும் நான்கு லட்சத்து 31 ஆயிரத்து 472 டன் நெகிழிக் கழிவுகள் அந்த ஆண்டில் தேங்கியிருந்தன. எனவே ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் நெகிழிகளைத் தயாரிப்பது, சேமித்துவைப்பது, விநியோகம் செய்வது, போக்குவரத்துக்கு கொண்டுசெல்வது, விற்பனை செய்வது போன்றவற்றை 2018 ஜூன் 25 லிருந்து தடைசெய்தது அரசு.

நெகிழிக்கு எதிரான இயக்கம்

ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் நெகிழிகளான உணவைப் பொட்டலம் போடும் நெகிழி, உணவு உண்ணும் மேசையில் விரிக்கும் நெகிழி, நெகிழித் தட்டுகள், தேநீர் குவளைகள், டம்ளர்கள், நீர் ஊற்றிவைக்கும் நெகிழிகள், ஸ்டிரா, கேரி பேக், நெகிழிக் கொடிகள் போன்றவை இதில் அடங்குகின்றன.

இந்தத் தடை உத்தரவு 2019 ஜனவரி 1 லிருந்து நடைமுறைக்கு வந்தது. இந்தத் தடை உத்தரவு நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கு மாநில அளவிலான குழு ஒன்றையும் அரசு அமைத்திருந்தது.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் கடந்த வரவு-செலவுத் திட்ட கூட்டத்தொடரில் 2021 செப்டம்பர் 3 அன்று தூக்கிவீசப்படும் நெகிழிகளுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடைமுறைப்படுத்துவது என்று அறிவிக்கப்பட்டது.

'மீண்டும் மஞ்சப்பை' - பரப்புரை

இந்த இயக்கத்தில் வர்த்தகச் சங்கங்கள், சமூக நல அமைப்புகள், வியாபாரிகள் சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோரை இணைத்து நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட ஆட்சியர்களின் வழிகாட்டுதலின்படி நெகிழிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

இதை நான்கு வகைகளாகப் பிரித்து அரசு நடைமுறைப்படுத்தும். இந்த நெகிழிகளுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை அரசு ஆதரிக்கும். மாநிலம் முழுவதும் நெகிழித் தடை உத்தரவை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும்.

இந்த நெகிழிகளுக்கு மாற்றாக மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைத் தயாரிப்பதற்கு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுடன் அரசு இணைந்து செயல்படும். அதன்படி 'மீண்டும் மஞ்சப்பை' என்ற தலைப்பில் மாநில அளவில் பரப்புரை மேற்கொள்ளப்படும். மஞ்சப்பை என்பது தமிழ்நாட்டு பண்பாட்டில் இணைந்த ஒன்றாகும்.

பரப்புரைக்கு இளைஞர்கள்

இந்த மஞ்சப்பை பரப்புரையின் மூலம் மக்கள் நெகிழிப் பைகளைப் புறக்கணித்து துணிப்பைகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஜெர்மன் நாட்டின் அமைப்புடன் இணைந்து செயல்படுத்தும். பொட்டலம் போடுவதற்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் அடையாளம் காணப்படும்.

பள்ளி-கல்லூரிகளில் இந்தப் பரப்புரை முன்னெடுக்கப்படும். இளைஞர்கள் இந்தப் பரப்புரைக்காகப் பயன்படுத்தப்படுவார்கள். இதற்காக மாநில - மாவட்ட அளவிலான பணிக்குழுக்கள் அமைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஓலா, உபரில் பயணிப்பவரா? இனி உங்களுக்கும் ஜிஎஸ்டிதான் - புத்தாண்டில் புது சுமை!

ABOUT THE AUTHOR

...view details