இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் கல்வி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலைக் கட்டுப்படுத்தவும் தான் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் முக்கிய அம்சமே எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயத் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது தான். ஆனால், மத்திய அரசு நேற்று வெளியிட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையில், 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது.
அதேபோல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது. உயர்கல்விக்கான ஒழுங்குமுறைகள் பெரும்பாலும் தனியாருக்கு சாதகமானவையாக இருப்பதால், உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, அரசு விலகிக் கொள்ளுமோ? என்ற ஐயம் ஏற்படுகிறது.