தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சண்முகம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அவரது பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு, அக்டோபர் மாதத்தில் மேலும் மூன்று மாதங்கள், அதாவது இம்மாதம் வரை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதோடு, தனக்கு மேலும் பதவி நீட்டிப்பு வேண்டாம் என அவர் அரசிடம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது ஊரக வளர்ச்சித்துறையின் செயலாளராக உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், அவருக்கும் முன்னதாக பணியில் சேர்ந்து டெல்லியில் பணியாற்றி வரும் ராஜிவ் ரஞ்சன் ஐஏஎஸ், மீண்டும் தமிழக பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ராஜீவ் ரஞ்சனை மீண்டும் மாநில அரசுப் பணிக்கு அனுப்பும்படி, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்தது. இதற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதால், அவர் விரைவில் தமிழகம் திரும்புகிறார்.