தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீட் பயிற்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சரியாக வழங்கவில்லை - டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு - for Social Equality

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை தமிழ்நாடு அரசு சரியாக அளிக்கவில்லை என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

Etv Bharatநீட் பயிற்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு சரியாக வழங்கவில்லை - டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு
Etv Bharatநீட் பயிற்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு சரியாக வழங்கவில்லை - டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு

By

Published : Sep 9, 2022, 9:59 PM IST

சென்னை:கல்வியை இலவசமாக கொடுக்காவிட்டால் மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் பதவியை விட்டுவிலகலாம் என டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் நீட் தேர்வு முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் பேசினார்.

நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்துப் பேசுகையில், ‘அரசுப்பள்ளி மாணாக்கர்கள் நீட் தேர்வில் குறைந்த அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது கவலை அளிக்கிறது. 80 விழுக்காட்டினருக்கும் மேல் தோல்வியுற்று இருப்பதாக வரும் புள்ளிவிவரம் வருத்தத்தை தருகிறது. இந்தப் பிரச்னையில் அரசு கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும். தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு, நீட் தேர்வில் இருந்து விலக்குப்பெற நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

அதே சமயத்தில் ஏழை மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான தரமான இலவசப்பயிற்சியை வழங்கிட கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும். தமிழ்நாடு அரசின் ஒதுக்கீட்டிற்குரிய மருத்துவ இடங்களுக்கு நீட்டிலிருந்து விலக்கு பெற்றாலும் கூட, நீட் பயிற்சி மையங்களைத்தொடர்ந்து சிறப்பாக தமிழ்நாடு அரசு நடத்திட வேண்டும். தங்கும் வசதியுடன் கூடிய மையங்களை வட்டாரம்தோறும் உருவாக்கிட வேண்டும்

மத்திய மருத்துவக் கல்லூரிகளுக்கும் நீட் அவசியம்: தமிழ்நாடு அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு , நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றாலும் கூட , எய்ம்ஸ், ஜிப்மர் , ராணுவ மருத்துவக் கல்லூரி, தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்களில் உள்ள மருத்துவ இடங்களுக்கும், அகில இந்தியத் தொகுப்பு இடங்கள் உட்பட ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவம், ஆயுஷ் மருத்துவம், பல்மருத்துவம், செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கும்,

வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கும், நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகியுள்ளது. மேலும் தமிழ்நாடு மாணவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் சேர உரிமை உண்டு. அகில இந்திய அளவில் இருக்கின்ற ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களிலும், ஆயுஷ் மருத்துவப் படிப்பு இடங்களிலும், தமிழ்நாட்டு மாணவர்கள் சேர உரிமை உண்டு. அதற்குத் தகுதி படைத்தவர்களாக நமது மாணவர்களை உருவாக்க வேண்டும்.

நீட் பயிற்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சரியாக வழங்கவில்லை - டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு

அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி குறைந்துள்ளது :தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கும் கூட , மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்,தேர்வு எழுத வேண்டும், வெற்றி பெற வேண்டும். அப்பொழுதுதான் அந்த இடங்களை அவர்கள் பெற முடியும். இத்தகைய நிலையில், சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி குறைந்துள்ளது கவலை அளிக்கிறது. நேரடிப்பயிற்சி வகுப்புகளை அரசு போதுமான அளவு நடத்தாதது இப்பின்னடைவிற்கு மிக முக்கியமான காரணம் எனத் தெரிகிறது.

திமுக-வின் தேர்தல் அறிக்கையிலும் , இதர தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளது போல், ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு, தரமான இலவச பயிற்சியை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக அரசு எடுத்திட வேண்டும். இம்மையங்களுக்கு தனியாக பயிற்சியாளர்களை நியமனம் செய்திட வேண்டும் என வலியுறுத்தினார்.

மாநில உரிமைகளைக் காத்திட நடவடிக்கை தேவை:அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்திட வேண்டும். ஆசிரியர் காலிப்பணி இடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். தேசியத் தேர்வு முகமை மாவட்ட அளவில் நீட் போட்டி தேர்வுக்கு பயிற்சி வழங்கப்படும் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அவ்வாக்குறுதியை உடனடியாக தேசிய தேர்வு முகமை நிறைவேற்ற வேண்டும். மருத்துவக் கல்வி உட்பட அனைத்து படிப்புகளிலும் மாநில உரிமைகளை காத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். கியூட் (CUET)தேர்வை, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி இடங்களுக்கு ஒன்றிய அரசு திணிக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களும், பட்ட மேற்படிப்பு மாணவர்களும் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது. முதல்வர் காப்பீட்டு திட்டத்தை அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தக் கூடாது. அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவம் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார மையங்களில் முறையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் மகப்பேறு மருத்துவம் பார்ப்பதால் பிரசவத்தில் இறக்கக் கூடிய பெண்களின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. எனவே அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே மகப்பேறு மருத்துவம் பார்க்கப்படும் நிலையை அரசு உருவாக்க வேண்டும்.

பதவி விலக வேண்டும்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தில் நிதிப்பற்றாக்குறையாக உள்ளது. மேலும் கல்வியை இலவசமாகவும் , தரமானதாகவும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் போட்டித் தேர்வு மையங்களை உருவாக்கிட வேண்டும். கல்வியை இலவசமாக கொடுக்காவிட்டால் மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் பதவியை விட்டு விலகலாம்’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க:நீட் தேர்வில் பூஜ்யத்திற்கும் கீழ் மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்

ABOUT THE AUTHOR

...view details