இந்தியா முழுவதும் பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைஃப் சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கு, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 2021 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள நிலையில், பி.எஸ்சி படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் எனக் கூறப்பட்டிருப்பது, பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறும்போது, ”ஏற்கனவே மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து சித்தா, யுனானி, ஆயுர்வேதா படிப்பிற்கும் நீட் கொண்டுவரப்பட்டது. இந்தாண்டு பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைஃப் சயின்ஸ் படிப்பிற்கும் நீட் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது, மாநில உரிமையை பறிக்கும் செயலாகும்.
இது கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரானது. மத்திய அரசின் இடங்களுக்கு மட்டும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். மாநில அரசின் இடங்களுக்கு தனது கொள்கையை மத்திய அரசு புகுத்துவதை உடனடியாக கைவிட வேண்டும்” என்றார்.