சென்னை:தமிழ்நாட்டில் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவது தொடர்பான சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப். 5) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், 10ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் க. பொன்முடி, இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கு. செல்வப்பெருந்தகை, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி. இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் வீ.பி. நாகைமாலி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஏ.ஆர். ரகுராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் எம். சிந்தனைச்செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி. வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்.ஹெச். ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.