சென்னை: இந்தியாவில் உள்ள இளநிலை எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் நாளை(செப்.07) வெளியிடப்படுகிறது. மத்திய அரசிற்கான 15 சதவீதம் இடங்கள் போக மீதமுள்ள 85 சதவீதம் இடங்களுக்கான கலந்தாய்வை தமிழ்நாடு மருத்துவக்கல்வி மாணவர்கள் சேர்க்கைக்குழு நடத்துகிறது.
மாநில அரசின் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மொத்தம் 10725 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் உள்ளன. இதில், 5500 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளும், 5225 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ளன.
இந்தியாவில் உள்ள இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு ஜூலை மாதம் 17ஆம் தேதி 497 நகரங்களில் 3570 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 தேர்வர்கள் எழுதி இருந்தனர்.
முதல்முறையாக இந்தியாவிற்கு வெளியில் 14 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. http://neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கனியாமூர் பள்ளி கலவரம்... பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக 17 வயது சிறார் உள்பட 3 பேர் கைது