சென்னை:தமிழ்நாட்டில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைப் படிக்க வைத்து மருத்துவர்களாக உருவாக்க வேண்டும் என நகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்க வைத்து வருகின்றனர். மேலும் கிராமங்களில் இருந்தாலும், நகரங்களில் தங்கி தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பது வாடிக்கை.
12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டபோது, கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.
ஆனால், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரையில் படித்து, மீண்டும் நீட் தேர்வுக்கும் படிக்க வைக்க வேண்டிய நிலைக்கு கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களின் பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் வசதியானவர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை மருத்துவத்திற்கு படிக்க வைக்கின்றனர்.
நீட் தேர்வின் தாக்கம்
இந்தியாவில் நீட் தேர்வு அடிப்படையில் இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்பு மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.
இந்தத் தேர்வினால் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தனியார் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களும் லட்சக்கணக்கில் செலவழித்து, தனியாக பயிற்சி பெற்றே நீட் தேர்வில் தகுதி பெறுகின்றனர்.
எம்பிபிஎஸ் படிப்பில் நீட் தேர்வு வருவதற்கு முன்பும், நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகும் மருத்துவப் படிப்பில் சேர்ந்த நகர்ப்புற மாணவர்கள், கிராமப்புற மாணவர்களின் விழுக்காடு விவரம் குறித்த புள்ளி விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன .