தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீட் ஆள்மாறாட்டம்:  இடைத்தரகராக செயல்பட்ட ஒருவர் கைது! - undefined

2018ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மருத்துவக்கல்லூரி மாணவர் மற்றும் அவரது தந்தை தேவேந்திரன் கைது விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

நீட் ஆள்மாறாட்டம்
நீட் ஆள்மாறாட்டம்

By

Published : Aug 2, 2021, 5:51 PM IST

Updated : Aug 2, 2021, 8:00 PM IST

2018ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மருத்துவக்கல்லூரி மாணவர் மற்றும் தந்தை தேவேந்திரன் கைது விவகாரத்தில், இடைத்தரகராக செயல்பட்ட ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டில், 2019-20ஆம் கல்வியாண்டில் தேனி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் புகார் எழுந்தது. அதனடிப்படையில் தேனி மாவட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

சிக்கிய தேனி மாணவர்

பின்னர் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட தேனி மருத்துவக் கல்லூரி மாணவன் மற்றும் அவனது தந்தை வெங்கடேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மேலும் ஆள்மாறாட்டம் செய்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர், அவர்களுக்கு உதவிய 4 இடைத்தரகர்கள் என மொத்தம் 18 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்படாத 11 பேர்
மேலும் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவர்களில் 11 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு சிபிசிஐடி போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர். ஆதார் ஆணையத்தின் மூலமாக முயன்றும் அவர்களின் விவரங்கள் பெறப்படவில்லை என்பதும் அவர்களில் ஒருவர்கூட இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் 2018-19ஆம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவன் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாகவும், அதேபாணியில் மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பூக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஏற்கெனவே இதுபோன்ற வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால், அவர்களிடம் தகவலைத் தெரிவித்தனர்.

இரண்டு பேர் கைது

அதனடிப்படையில் இவ்வழக்கை தனி வழக்காகப் பதிவு செய்து, சந்தேகத்திற்கு இடமான மாணவன் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்திருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்துவந்த அந்த மருத்துவ மாணவன் மற்றும் அவனது தந்தை தேவேந்திரன் ஆகியோரை, ஓசூரில் வைத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இவ்வழக்கானது கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் சென்னை மருத்துவ மாணவன் குறித்த வழக்கில், இடைத்தரகராக செயல்பட்ட ஸ்ரீஹர்ஷா என்பவரை பெங்களூருவில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் இடைத்தரகரான ஸ்ரீஹர்ஷா பற்றிய பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாகவும், நீண்ட காலம் ஸ்ரீஹர்ஷா தரகராக செயல்பட்டதும், கைது செய்யப்பட்ட இடைத்தரகர் பெங்களூருவில் உள்ள தும்கூர் தாலுகாவின் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் பிரமுகர் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர் குறைந்தபட்சம் 20 லட்சம் முதல் அதிகப்பட்சம் 25 லட்சம் ரூபாய் வரையிலான பணத்திற்கு, சென்னை மாணவனுக்கு சீட்டு வாங்கித் தந்ததும் தெரியவந்துள்ளது. இதுபோன்று மருத்துவச்சீட்டு வாங்கித்தருவதாகக் கூறி, தரகராக செயல்பட்டு கர்நாடக மாநிலத்தில் ஏற்கெனவே மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டு இருப்பதும் ஸ்ரீஹர்ஷா குறித்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஓட்டுநர் உரிமத்தால் மாட்டிய இடைத்தரகர்

மேலும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட சென்னை மருத்துவ மாணவன் மற்றும் அவனது தந்தை தேவேந்திரனிடம், நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக, தனது ஓட்டுநர் உரிமத்தை ஸ்ரீ ஹர்ஷா கொடுத்துச் சென்றுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னை மருத்துவ மாணவன் வீட்டில் சோதனை நடத்தியதன் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட அந்த ஓட்டுநர் உரிமத்தை அடிப்படையாக வைத்துதான் இடைத்தரகர் ஸ்ரீஹர்ஷா பிடிபட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் ஸ்ரீஹர்ஷா தவிர முக்கியத் தரகராக பிகாரைச் சேர்ந்த ஒருவர் செயல்பட்டதாகவும், அவர் மூலம் ஒரு பிஹார் மருத்துவரை வைத்து சென்னை மாணவருக்குப் பதிலாக தேர்வு எழுத வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த இடைத்தரகர் குறித்தும், தேர்வு எழுதிய மருத்துவர் குறித்தும் முழு தகவல்களையும் திரட்டி உள்ள சிபிசிஐடி போலீசார், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கைதான இடைத்தரகர் ஸ்ரீஹர்ஷாவை சிபிசிஐடி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நீட் ஆள்மாறாட்ட வழக்கு - முக்கிய இடைத்தரகரிடம் சிபிசிஐடி விசாரணை

Last Updated : Aug 2, 2021, 8:00 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details