சென்னை:மாநகரின் புறநகர்ப் பகுதியான ஊரப்பாக்கம் அருகே காரணை ஊராட்சியில் கணவரை இழந்து வசித்து வருவபவர், ஷோபனா (27). இவருக்கு ஒரு மகள்(6) உள்ளார்.
இந்த நிலையில் இவருக்கும் புழல் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரியும், விக்னேஷ்வர் என்பவருக்கும், சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக்(Facebook) வாயிலாகப் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாகப் பழகி அதன் பின் அது காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கருக்கலைப்பு
இதன் பின்னர், இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்ததினால், கருவுற்றதாகவும், அதை விக்னேஷ்வர் கட்டாயப்படுத்திக் கருக்கலைப்பு செய்ததாகவும் தெரியவருகிறது.
மேலும், தன்னை தாலிக்கட்டித் திருமணம் செய்துகொள்ளுமாறு ஷோபனா கேட்டதற்கு, விக்னேஷ்வர் மறுத்துள்ளார். சில மாதங்கள் கழித்து விக்னேஷ்வர், ஷோபனாவிடம் 'இனி உன்னுடன் வாழ மாட்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.
கண்டுகொள்ளாத காவல்துறை
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷோபனா, செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டிச.27ஆம் தேதியன்று புகார் அளித்தார்.
காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை காவல்துறை வழக்குப் பதிவு செய்த நிலையில் அவரை அழைத்துப் பேசினர். அதில், விக்னேஷ்வர், தான் சேர்ந்து வாழ விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அப்பெண் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அங்கிருந்து மாதவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்குப் புகார் அனுப்பப்பட்ட நிலையில் அந்த காவல் நிலைய காவலர், சரிவர வழக்கை விசாரிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
கொலை மிரட்டல்
பின்னர் செல்போனில் ஷோபனாவைத் தொடர்புகொண்டு, விக்னேஷ் ஆபாசமாகப் பேசி திட்டியுள்ளார். இவ்விவகாரம் அறிந்து, ஷோபனாவிற்கு முன் வந்த மாதர் சங்கத்தினரையும் விக்னேஷ்வர், ஆபாசமாகப் பேசி, ஷோபனாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.
இதையடுத்து தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஷோபனா புகார் அளித்தார். அந்தப் புகார் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, அனுப்பப்பட்டது. எனினும் காவல்துறையினர் வழக்கை சரிவர விசாரிக்க மறுப்பதாக ஷோபனா குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஃபேஸ்புக்கில் பழகி பெண்ணை ஏமாற்றிய காவலர் விக்னேஷ்வர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துபார்ப்போம்.
இதையும் படிங்க: கூட்டுச்சதி வழக்கு: திலீப் மற்றும் அவரின் கூட்டாளிக்கு ஜாமீன்