தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பி.எஸ்சி நர்சிங்கிற்கும் நீட்! - உடன் திரும்பப்பெற வலியுறுத்தல்! - பிஎஸ்சி நர்சிங்

சென்னை: பி.எஸ்சி நர்சிங், லைஃப் சயின்ஸ் படிப்புகளுக்கும் நீட் நுழைவுத்தேர்வு என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தியுள்ளது.

neet
neet

By

Published : Mar 13, 2021, 8:42 PM IST

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை பறித்தது போதாதென்று, தற்போது கல்லூரிக் கனவையே பறிக்க முற்பட்டிருக்கிறார்கள். இனி கல்லூரியில் கால் வைக்கவே பல லட்சம் செலவு செய்ய வேண்டும் என்ற நிலையை ஒவ்வொரு மாணவருக்கும் இந்த அறிவிப்பு ஏற்படுத்துகிறது.

செவிலியர் படிப்பு தொடங்கி இனி எல்லாப் பட்டப்படிப்பிற்கும் "நீட்" என்பது, சமூக நீதிக்கும், சம கற்றல் வாய்ப்பிற்கும் எதிரானது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மாணவர்கள் உட்பட விளிம்பு நிலை மக்கள், குறிப்பாக பெண்கள், 12 முடித்தால் கல்லூரி செல்லலாம் என்று இருக்கும் வாய்ப்பை தட்டிப் பறிக்கவே இந்த நீட்.

இத்தகைய மக்கள் விரோத கொள்கையை தமிழ்நாடு மக்கள் நிராகரிக்க வேண்டும். மக்களாட்சியின் இந்த மகத்துவத்தை உணர்ந்து "நீட்" நிராகரிப்பிற்கு தங்களின் வாக்குகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். தேசியத் தேர்வு முகமையின் "நீட்" அறிவிப்பை உடன் திரும்பப் பெற வேண்டும். அனைத்துப் பட்டப் படிப்பிற்கும் மாணவர்கள் சேர்க்கையை 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தான் நிகழ்த்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எம்.பி.பி.எஸ் படிப்புக்கு கொண்டுவரப்பட்ட நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கோரி வந்ததை பொருட்படுத்தாத மத்திய அரசு, சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோ மருத்துவப் படிப்புகளையும் நீட் சுழலுக்குள் தள்ளியது. இந்நிலையில், நர்சிங், உயிரியல் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நடத்த முடிவெடுத்துள்ளது. எனவே, நீட் தேர்வைத் திணித்துள்ள மத்திய ஆட்சியாளர்களுக்கும் அதற்கு துணைபோகும் தமிழக ஆட்சியாளர்களுக்கும் தகுந்த பாடத்தை தேர்தல் வழியே மக்கள் புகட்ட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இனி பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட்! - கடும் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details