சென்னை: சென்னை ஐஐடியில் தொடர்ந்து சாதியப் பாகுப்பாடுகள் நிலவுவதாகவும், பட்டியல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை எனவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.சென்னை ஐஐடியில் நிலவிய சாதியப் பாகுப்பாட்டினால் உதவிப் பேராசிரியரான விபின் பி.வீட்டில், தனது பணியை ராஜினமாக செய்வதாகக் கூறி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கும் ஐஐடி நிர்வாகத்திற்கும் முன்னதாக கடிதம் எழுதினார்.
இதனைத் தொடர்ந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் சென்னை ஐஐடியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இன்று (ஜூலை.12) விசாரணை மேற்கொண்டார்.
இட ஒதுக்கீடு குறித்து விசாரணை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் விசாரணை மேற்கொள்ள வந்துள்ளேன். என்னிடம் பல்வேறு அமைப்பினர் தங்களின் கோரிக்கைகளை அளித்துள்ளனர்.
சென்னை ஐஐடியில் நடைமுறைப்படுத்தப்படும் இட ஒதுக்கீடு முறை உள்ளிட்டவைகள் குறித்து அதன் தலைவர், பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினேன். ஐஐடியில் பின்பற்றப்பட்டு வரும் பட்டியல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் குறித்தும் கேட்டறிந்தோம்.
மேலும் அங்கு பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறை குறித்து 30 நாள்களுக்குள் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்திற்கு அறிக்கையை அனுப்ப வேண்டும் என சென்னை ஐஐடிக்கு உத்தரவிட்டு உள்ளோம். மீண்டும் 30 நாள்களுக்கு பின்னர் விசாரணை நடத்த உள்ளோம்.