தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிக்கை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய தலைவர்களின் பார்வை தமிழ்நாட்டை நோக்கி திரும்பியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத், பொங்கல் பண்டிகையை முதன் முறையாக சென்னை மூலக்கடை அருகே ஸ்ரீநவசக்தி கடம்பாடி சின்னம்மன் ஆலயத்தில் அனைத்து தரப்பினர் மற்றும் நிர்வாகிகளுடன் கொண்டாடுகிறார்.
இதில் பொங்கல் வழிபாடு, கோமாதா பூஜை, விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி அவர் வாழ்த்துரை வழங்குகிறார். நேற்றைய தினம் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் ஆலோசனை சேத்துப்பட்டில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது குறிப்பிடதக்கது.
பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தலைவராக பதவியேற்ற பின் முதன் முறையாக சென்னை, மதுரவாயல் சீமாட்டி அம்மன் மைதானத்தில் பிரம்மாண்ட மேடையில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் கொண்டாடுகிறார்.
தமிழர் கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை முடித்து கொண்டு துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல்காந்தி முதன் முறையாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு பொங்கலை கொண்டாடுகிறார், இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கின்றனர். சிறப்பான மாடுபிடி வீரர்கள் மட்டும் காளைகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்படுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கலை பண்டிகையை தனது கிராமத்தில் உறவினர்களுடன் கொண்டாடுவது வழக்கம். இந்த முறை காவல்துறை சார்பாக நடைபெறும் பொங்கல் விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினலுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இம்முறை, கரோனா காலம் என்பதால் முக்கிய நிர்வாகிகளை மட்டும் சந்திக்கவுள்ளார். தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கோணம்பேடு கடும்பாடி சின்னம்மன் ஆலயம் அருகே நடைபெறும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.
தேர்தல் ஜூரம் தமிழ்நாட்டில் பற்றிகொண்டுள்ளதால் அனைத்து தலைவர்களும் வித்தியாசமான முறையில் பொங்கலை பொதுமக்களுடன் கொண்டாடுகின்றனர்.