சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலப்பிரிவு மாநில நிர்வாகிகள் அறிமுக கூட்டம், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, "அமலாக்கத்துறை, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். தங்களது கருத்துக்கு மாறாக உள்ளவர்களை விசாரணைக்கு அழைப்பது புதியது இல்லை. அன்றைய மொரார்ஜி தேசாய் அரசாங்கம் இந்திரா காந்தி மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. தற்போது மோடியின் சர்வாதிகார ஆட்சி அதேபோல் செய்கிறது.
அமலாக்கத்துறை, பிரதமர் மோடியிடம் சென்றுவிட்டது. விசாரணை என்ற பெயரில் எங்களுக்கு மக்கள் மத்தியில் இழுக்கை ஏற்படுத்துகிறார்கள். 'நேஷனல் ஹெரால்டு' விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தூய்மையாக இருக்கிறது. அமலாக்கத்துறையில், நாளை ராகுல் காந்தி ஆஜராகும் நேரத்தில் அனைத்து மாநில அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் ஹடோஸ் சாலை அமலாக்கத்துறை அலுவலகம் உள்ள சாஸ்திரி பவன் முன்பு, நாளை காலை 9 மணிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையிலும், உண்மையை வெளிக்கொண்டு வரும் வகையிலும் ஆர்ப்பாட்டம் இருக்கும்.
'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை மீண்டும் தொடங்கப்பட்டபோது, பங்கு பரிவர்த்தனை அனைத்தும் சட்டப்பூர்வமாக பத்திரப்பதிவு மூலம் நடைபெற்றது. பரிவர்த்தனையில் ஒரு பைசா கூட பணமாக கொடுக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது அமலாக்கத்துறை விசாரணை தேவையில்லாதது.
அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து காங்கிரஸ் நிற்கும். மோடி அரசாங்கம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. அவர்களின் பொருளாதார கொள்கைகள் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. மோடி அரசாங்கத்தின் தொழில் கொள்கை தோல்வியடைந்துவிட்டது. ரயில்வே நிர்வாகத்தை தனியாருக்கு தாரை வார்க்கிறது மோடி அரசாங்கம். இவற்றை எல்லாம் மறைப்பதற்கு இதுபோன்ற பிரச்னைகளைக் கொண்டு வந்து பிரசாரம் செய்து வருகிறது பாஜக" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாளை 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு