சென்னை:கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் நீர் தேங்கி, பாதிப்பை ஏற்படுத்தியது.
மாநகராட்சி சார்பில், திநகர் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வடிகால்கள் வழியாக நீரை வெளியேற்றிய போதிலும், அதில் செல்லாமல் மீண்டும் எதிர்வாங்கியதால், குடியிருப்புப் பகுதியில் நீர் அப்படியே தேங்கியது.
இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அந்த வழக்கு இன்று (பிப்ரவரி 4) விசாரணைக்கு வந்தபோது, நீர் வடியாமல் இருந்தது தொடர்பாக மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது, தி. நகர், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, மேற்கு மாம்பலம், சிஐடி நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வரும் வெளியேறும் நீர் மாம்பலம் கால்வாய் வழியாகத்தான் வெளியேறுகிறது.
இந்தக் கால்வாயைச் சீரமைக்க கடந்த ஆட்சிக் காலத்தில் ஆறு ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அவர்கள் கால்வாய் சீரமைப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
சீரமைப்புப் பணியின்போது சேர்ந்த கட்டட கழிவுகளை கால்வாய் அருகே ஆங்காங்கே கொட்டிவிட்டுச் சென்றதால், கால்வாயின் நீர் வழித்தடத்தை அடைத்துக்கொண்டதாகவும் இதனால், நீர் சீராகச் செல்ல முடியாமல் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், அந்தக் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான செலவை ஸ்மார்ட்சிட்டி ஒப்பந்ததாரர்கள் செலுத்த வேண்டும் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 28ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளனர்.
இதையும் படிங்க:இந்தியாவில் கரோனா பரவல் குறைந்தது: 1.49 லட்சம் புதிய தொற்றாளர்கள்