சென்னை: லீ மெரிடியன் உள்ளிட்ட அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை ரூ.423 கோடிக்கு எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் எம்.கே.ராஜகோபாலனுக்கு வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல தொழிலதிபர் பழனி ஜி பெரியசாமியின் அப்பு ஹோட்டல் நிறுவனம், இந்திய சுற்றுலா நிதி நிறுவனத்திடம் வியாபார நடவடிக்கைகளுக்காக கடன் பெற்று இருந்தது.
அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் அப்பு ஹோட்டல் நிறுவனம் திவாலானதாகக் கருதி, சென்னை மற்றும் கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல்களையும், கும்பகோணத்தில் உள்ள ரிவர்சைட் ஸ்பா மற்றும் ரிசார்ட்டையும் விற்று கடனை அடைக்க அனுமதிக்கக்கோரி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் இந்திய சுற்றுலா நிதி நிறுவனம் வழக்குத் தொடர்ந்து.
அதை விசாரித்த தீர்ப்பாயம், அந்த சொத்துக்களின் மதிப்பை கணக்கிடுவதற்கும், அவற்றை வாங்குவதற்கான நபரை கண்டறிவதற்கும் தீர்வாளரை நியமித்தது.
இந்த சொத்துக்களின் மதிப்பு 730.88 கோடி ரூபாய் எனவும், 569.33 கோடி ரூபாய்க்கு வாங்குபவர்களுக்கு விற்கலாம் எனவும் தீர்வாளர் (resolution professional) முடிவெடுத்தார்.
அவற்றை வாங்குவதற்கு மாதவ் திர், எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் எம்கே.ராஜகோபாலன், கோட்டக் ஸ்பெஷல் சிச்சுவேஷன் ஆகியவை விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ராஜகோபாலன் குறிப்பிட்டிருந்த 423 கோடி ரூபாய்க்கு அவற்றை விற்கலாம் என அளித்த பரிந்துரையை ஏற்ற தீர்ப்பாயம், அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் லீ மெரிடியன் உள்ளிட்ட 4 சொத்துகளை எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவன எம்.கே.ராஜகோபாலனிடம் மாற்ற அனுமதித்து.
இதை எதிர்த்து அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பழனி ஜி பெரியசாமி, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.