மூன்று முறை சிறந்த கலை இயக்குநருக்கான தேசிய விருதுபெற்றவரும் ஜி.வி. அய்யர், பாரதிராஜா போன்ற பல முன்னணி இயக்குநர்களோடு பணியாற்றியவருமான கலை இயக்குநர் பி. கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவு காலமானார்.
இவரது சொந்த ஊர் பூம்புகார். 90-களில் வெளியான பல வெற்றிப்படங்களுக்கு கிருஷ்ணமூர்த்தி செட் அமைத்துப் புகழ்பெற்றவர். பாண்டவர் பூமி, இம்சை அரசன் 23ம் புலிகேசி உள்ளிட்ட படங்களுக்கு சிறப்பான செட் அமைத்தது மட்டுமின்றி தமிழைத் தவிர மலையாளம், தெலுங்கு படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
இதுவரை மூன்று தேசிய விருதுகள், கலைமாமணி விருதுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இவ்வளவு புகழுக்குச் சொந்தக்காரரான கிருஷ்ணமூர்த்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
அவரது இறுதிச் சடங்குகள் இன்று மதியம் 12 மணிக்கு மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. அண்மைக் காலமாகவே கிருஷ்ணமூர்த்தி தனது பொருளாதாரம் இழந்து மிகவும் வறுமையில் வாடிவந்தார்.
தேசிய விருதுகள், கலைமாமணி விருதுகள், உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் வென்றிருந்த கிருஷ்ணமூர்த்தி கலைமாமணியில் சிலவற்றை விற்றுதான் தனது இதய அறுவை சிகிச்சையை செய்தார் என்றும் கூறப்படுகிறது.