சென்னை:உயர்நீதிமன்றம் வளாகம் அருகே உள்ள தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வளாகத்தில் ஒரு நபர் இன்று மாலை திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டார். உடனடியாக அருகிலிருந்த காவல்துறையினர் தீயை அணைத்தனர்.
பின்னர் தீக்குளித்த அந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பதும், இவர் மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் மலைகுறவர் சமூகத்தை சேர்ந்த ஒரே பிரிவினருக்கு பல்வேறு வகையான சாதி சான்றிதழ் தமிழ்நாட்டில் வழங்கப்படுவதாகவும், குறவன் சமூகத்தை சேர்ந்த அனைவருக்கும் மலைக்குறவன் என்ற ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்த வடமாநிலத்தவருக்கும் நரிக்குறவர் சான்றிதழ் வழங்குவதால் தமிழ்நாடு குறவர்களின் அடையாளம் முற்றிலும் அழிக்கப்படும் என கூறிய அவர், உடனடியாக மலைகுறவ சமுதாயத்திற்கு சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேல்முருகன் பல முறை அரசு நிர்வாகத்திடம் விண்ணப்பித்தும் மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து வேல்முருகன் இன்று உயர்நீதிமன்றம் வந்த போது காவலர்கள் அவரை தடுத்து பேசி கொண்டிருக்கும் போது திடீரென லைட்டரை வைத்து உடலில் தீ வைத்ததும் தெரியவந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவர் மீது தீயணைப்பான் கருவியினை கொண்டு தீயை அணைத்துள்ளனர்.
மேலும் 95% தீக்காயங்களுடன் இருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வேல்முருகனை காப்பாற்ற முயன்ற போது உதவி ஆய்வாளர் தினகரன் என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நரிக்குறவர் தீக்குளிப்பு சம்பவ இடத்தில் பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான், நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையர் சாம்சன் ஆகியோர் பார்வையிட்டு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயர்நீதிமன்றம் அருகே உள்ள சட்ட உதவி மையத்தில் நடைப்பெற்றுள்ள இச்சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தேவர் ஜெயந்தி குருபூஜைக்கு தமிழ்நாடு வருகிறாரா பிரதமர்?