சென்னை: இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முக்கிய ஊழல் வழக்குகளில் விசாரணை அலுவலராகவும் - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் கண்காணிப்பாளராகவும் இருந்து ஓய்வுபெற்ற நல்லம நாயுடு வயது முதிர்வு காரணமாக மறைவெய்தினார் (Nallamma Naidu passed away) என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக - எவ்வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் நியாயத்தையும் - நீதியையும் நிலைநாட்டும் துணிச்சல்மிக்க அலுவலராகப் பணியாற்றிவர்.
ஊழல் வழக்குகளை - குறிப்பாக அதிமுக ஆட்சியின் ஊழல் வழக்குகளை விசாரித்தவர். உச்ச நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தவுடன் 'நீதி வென்றது' என்று அவர் அளித்த பேட்டி இன்றும் என் நினைவில் இருக்கிறது.