தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம், ஜே.என்.யு. மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் ஆகியவற்றைக் கண்டித்து பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தச் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பூபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாநில செயலாளர் நல்லகண்ணு கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் திமுக, விசிக, சிபிஜ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நல்லகண்ணு, "கடந்த டிசம்பர் மாதம், நாடாளுமன்ற கூட்டத்தில் அவசர அவசரமாக தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அப்போது அதிமுகவினர் ஆதரிக்கவில்லை என்றால் இந்த சட்டம் நிறைவேறியிருக்காது. இச்சட்டத்தால் இஸ்லாமியர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இஸ்லாமிய மக்களை பழி வாங்கவேண்டும் என்ற முறையில் அச்சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மதவெறி கொண்ட பாஜகவின் இந்தக் கொள்கையை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதுவரை, 11 மாநிலங்கள் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துவிட்டார்கள். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராடிய ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். அந்த மாணவர்களை தாக்கிய நபர்கள் மீது வழக்கு தொடுக்கப்படாததை வன்மையாக கண்டிக்கிறோம்.