சென்னை, கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ராஜ்குமார் (42). இவருக்கு திருமணமாகி எலிசபெத் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஏழு வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
குடிபோதைக்கு அடிமை
இந்நிலையில், கொடுங்கையூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் ராஜ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாகக் குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. குடிபோதைக்கு அடிமையான ராஜ்குமார் இரவு நேரங்களில் வீட்டிற்கு தனது நண்பர்களை வரவழைத்து மது அருந்துவது வழக்கம்.
இதனால் இவரது தாய் சுமதி கொடுங்கையூர் ஜம்புலிங்கம் தெருவில் உள்ள தனது மகள் ஜெனிபர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
முன்விரோதம் காரணமா?
ராஜ்குமார் மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்துவந்த நிலையில் நேற்று (ஏப். 18) மதியம் 2 மணிவரை ராஜ்குமார் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ராஜ்குமாரின் தங்கை ஜெனிபர் உள்ளே சென்று பார்த்தபோது, தலையில் ரத்த காயங்களுடன் அவர் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெனிபர் வெளியே ஓடிவந்து அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் காவல் துறை ராஜ்குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நேற்றிரவு ராஜ்குமார் யாருடன் மது அருந்தினார்? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டரா? என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பொருளாதார நெருக்கடி: 'மகளை ஆற்றில் வீசி கொலைசெய்த தந்தை'