சென்னை:முத்துராமலிங்கத் தேவரின் 114ஆவது பிறந்த நாளான இன்று(அக்.30) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே என் தேசத்துக்காகவே தவிர எனக்காக அல்ல" என்று வாழ்ந்தவர் தேவர் திருமகனார். தனது தேகத்தையே தேசத்துக்காக ஒப்படைத்தவர் அவர்.
''மனிதனை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் பெயரால் மட்டுமே மரியாதை கொடுக்க வேண்டுமே தவிரச் சாதியால் அல்ல" என்று சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக முழங்கியவர் பசும்பொன் தேவர் திருமகனார். அனைவருக்குமான தலைவர் அவர்.
''பக்குவப்பட்ட ஒருவன், இந்து கோயிலில் காட்டுகின்ற தீப வெளிச்சத்தையும் – கிறித்துவ வளாகத்தில் வைக்கிற மெழுகுவத்தி ஒளியையும் - முகமதியர் ஊதுபத்தியில் காணுகின்ற சுடரையும் தன் உடலின் இருட்டைப் போக்க எழுப்ப வேண்டிய ஞான விளக்கின் வடிவமாகக் காண்பான்" என்று சொன்ன மதநல்லிணக்க மாமனிதர்.