தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’மோடியும் அமித்ஷாவும் மாற்றி மாற்றி பேசுகின்றனர்’ - இசுலாமிய அமைப்புகள்

சென்னை: ஆலந்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், திமுக தோழமைக் கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

rally
rally

By

Published : Dec 31, 2019, 6:41 PM IST

சென்னை ஆலந்தூரில், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப் பெற வலியுறுத்தி, ஆலந்தூர் சுற்றுவட்டார மஹல்லாக்கள் கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிண்டி மஸ்ஜிதே தக்வா அருகில் தொடங்கிய இந்தப் பேரணியில் தமமுக, மமக, மஜக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களுடன் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர், கையில் தேசியக் கொடியுடன் சென்று தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

ஆலந்தூர் மெட்ரோ அருகிலுள்ள ஆசர்கானா மைதானத்தைப் பேரணி வந்தடைந்ததும், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவையின் தீமை குறித்து, மந்தைவெளி பள்ளிவாசல் தலைமை இமாம் இல்லியாஸ் ரியாஜி, மடுவாங்கரை பள்ளிவாசல் தலைமை இமாம் சாகுல் ஹமீத் சிராஜ், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பரசன் ஆகியோர் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மந்தைவெளி பள்ளிவாசல் தலைமை இமாம் இல்லியாஸ் சிராஜி, “மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்திருக்கின்ற குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டும் நாடு முழுக்க செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரதமர் அவ்வாறு நடக்காது என்கிறார். உள்துறை அமைச்சரோ 2024க்குள் நாட்டில் உள்ளக் குடியேறிகளை அப்புறப்படுத்திவிடுவோம் என்கிறார். அதிகாரத்தில் இருப்பவர்கள் மாற்றி மாற்றிப் பேசுவது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக 3000 பேருக்கு தடுப்புக் காவல் மையம் அமைப்பதற்காக 40 கோடியை ஒதுக்கி இருக்கிறார்கள். மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில் நாடு இருக்கும் இந்த சூழலில் சொந்த நாட்டின் மக்களை, இந்தியர்கள் இல்லை என்று சொல்வதற்கு பல கோடிகளை அரசு செலவிடுவது எந்த விதத்தில் நியாயம். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததன் மூலம் மிகப்பெரிய வரலாற்றுத் துரோகத்தை ஈழத் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தமிழ்நாடு அரசு செய்துள்ளது “எனத் தெரிவித்தார்.

முஸ்லிம், ஈழத்தமிழர் மட்டுமல்ல; ஒட்டுமொத்த மக்களுக்கும் தீங்கானது குடியுரிமைச் சட்டம்

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பேரணி!

ABOUT THE AUTHOR

...view details