சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இணைந்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில், இஸ்லாமிய அமைப்பினர் இடைவிடாமல் தொடர்ந்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, இன்று சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் முதல் தலைமைச் செயலகம் வரை, பேரணியாகச் சென்று முற்றுகைப் போராட்டத்தில், இஸ்லாமிய அமைப்பினர் ஈடுபடுகின்றனர். முன்னதாக காவல்துறையினர் இதற்கு அனுமதி அளிக்கவில்லை எனத்தெரிகிறது.
இந்த தடையை மீறிய செயல்பாட்டினால், சுமார் 10 ஆயிரம் காவல் துறையினர் மாநகரில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், 2 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வஜ்ரா வாகனங்கள் ஆகியவை முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Muslims protest against CAA in chennai தலைமைச் செயலகம் அருகேயுள்ள போர் நினைவுச் சின்னம் பகுதியில், காவல் துறையினர் பேரிகார்டு வைத்து தீவிர வாகன சோதனைக்குப் பின்னரே வாகனங்களை அனுமதிக்கின்றனர்.
தலைமைச் செயலகத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுவதால், கலைவாணர் அரங்கம் முதல் சேப்பாக்கம் வரை மட்டுமே பேரணியாக செல்ல காவல் துறையினர் அனுமதித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.