'800' படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்
15:20 October 19
'800' படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கேட்டுக்கொண்டதற்கு 'நன்றி, வணக்கம்' என்று நடிகர் விஜய் சேதுபதி பதிவு செய்துள்ளது மூலம் அந்தப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவது உறுதியாகியுள்ளது.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழ் தேசியக் கட்சிகளும், பிற அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு எதிரான கருத்துகள் வெளி வந்ததைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 'நான் என்றும் இனப்படுகொலைக்கு ஆதரவாக பேசவில்லை. சிலர் இதில் அரசியல் செய்கின்றனர்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்ந்து பேசும் பொருளாக இருந்த நிலையில் தொடர்ந்து விஜய் சேதுபதி மெளனம் காத்து வந்தார்.
இந்நிலையில் இலங்கை ஊடகத்திற்கு விஜய் சேதுபதி, '800 படத்தில் நான் நடிப்பதில் உறுதியாக இருக்கேன்' என்று பேட்டி அளித்துள்ளார் என்று செய்திகள் வெளி வந்தன. ஆனால், அந்தப் பேட்டி ஒரு ஆண்டிற்கு முன்பாக அவர் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் '800' படம் தொடர்பாக முத்தையா முரளிதரன் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே, என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது, இவருக்கு வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது, இதனால் இத்திரைப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். இதனை ட்விட்டரில் பின்னூட்டம் செய்து 'நன்றி வணக்கம்' என்று விஜய் சேதுபதி பதிவு செய்துள்ளார்.
இந்தப் பதிவு மூலம் '800' படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுகிறார் என கிட்டத்தட்ட உறுதிாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்றாலும் விஜய் சேதுபதிக்கு நெருக்கமானவர்கள் '800' படத்தில் விஜய் சேதுபதி நடிக்கமாட்டார் என்றும் தெரிவிக்கின்றனர்.