தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 20, 2022, 1:28 PM IST

ETV Bharat / city

'சுயஉதவிக் குழுக்கள் வங்கிக் கடனில் 35% முதலீட்டு மானியம் பெற்று பயனடையலாம்'

பிரதம மந்திரி சிறு, குறு உணவு உறுபத்தியாளர்களுக்கான நிதியுதவி திட்டத்தில், சுயஉதவிக் குழுக்கள் தங்களின் கடனில் 35 விழுக்காட்டை முதலீட்டு மானியமாக பெற்று பயனடையலாம் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகம்
நகராட்சி நிர்வாகம்

சென்னை:பிரதம மந்திரி சிறு, குறு உணவு உற்பத்தியாளர்களுக்கான நிதியுதவித் திட்டம் குறித்து நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அரங்கில் நேற்று (ஜூலை 19) நடைபெற்றது.

இதில் அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க செயல் இயக்குநர் பிரியங்கா பங்கஜம், துணை ஆணையாளர் (கல்வி) டி.சினேகா உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பேசியதாவது, "மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் பல்வேறு திட்டங்களின்கீழ் சுயதொழில் புரிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மகளிருக்கு மேலும் ஒரு வாய்ப்பாக பிரதம மந்திரி சிறு, குறு உணவு உற்பத்தியாளர்களுக்கான நிதியுதவித் திட்டத்தின்கீழ் உணவு உற்பத்தி தொடர்பான தொழில் புரிய கடனுதவி வழங்கப்படுகிறது. பொதுவாக, வழங்கப்படும் கடனுதவிகளில் வட்டிக்கான மானியம் வழங்கப்படும்.

ஆனால், இத்திட்டத்தில் வங்கிக் கடனில் 35% முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது. எனவே, மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் இம்முகாமில் தெரிவிக்கப்படும் திட்டம் குறித்த விவரங்களை முழுவதுமாக அறிந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், குறிப்பாக உணவு உற்பத்தியில் ஈடுபடும் மகளிர் தங்களுடைய இடத்தில் சேகரமாகும் ஈரக் கழிவுகள் அல்லது உணவுக் கழிவுகளை தனியாக பிரித்து வழங்க வேண்டும். தங்கள் பகுதிகளில் உள்ள பிற நபர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசின் சார்பில் 'என் குப்பை எனது பொறுப்பு' என்கின்ற தீவிர தூய்மைப் பணி திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் சார்பில் திடக்கழிவுகளை மக்கும், மக்காத கழிவுகளாக பிரித்து வழங்குவது குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்குவது மற்றும் மாதத்தின் 2ஆவது மற்றும் 4ஆவது சனிக்கிழமைகளில் பொதுமக்களுடன் இணைந்து தூய்மைப் பணிகள் மேற்கொள்வது போன்ற பல்வேறு விதமான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே, நாம் அனைவரும் நாம் சார்ந்த பகுதிகளில் திடக்கழிவுகளை பிரித்து வழங்கி நம்முடைய சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க அரசிற்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் ஊக்குவிப்பது தொடர்பாகவும், முதலீட்டு ஆதார நிதி வங்கிக் கடனுதவி மற்றும் 35% மூலதன முதலீட்டு மானியம் பெறுவது தொடர்பாகவும், தங்களுடைய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துதல், வியாபார வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற விவரங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவரிக்கப்பட்டது.

இதையும் படிங்க:மின் கட்டணம் , வீட்டு வரி உயர்வைக் கண்டித்து அதிமுக வரும் 25ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details